புகழேந்தி புலவர் இயற்றிய நளவெண்பாபுகழேந்தி புலவர் இயற்றிய நளவெண்பா
பாயிரம்

கடவுள் வணக்கம்
ஆதி தனிக்கோல மானா னடியவற்கா
சோதி திருத்தூணிற் றோன்றினான் வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப
என்னென்றா னெங்க கிறை
அவையடக்கம்
வெந்தறுகண் வேழத்தை வேரி கமலத்தின்
தந்துவினாற் கட்ட சமைவதொக்கும் பைந்தொடையில்
தேன்பாடு தார் நளன்றன் தெய்வ திருக்கதையை
யான்பாட லுற்ற இது
நூல் வரலாறு

யுதிட்டிரர் வனத்தில் இருந்தது
பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுது தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனா சென்றவனி வேண்ட
மறுத்தா னிருந்தானை மண்ணொடும் போய் மாள
பொறுத்தா னிருந்தான் புலர்ந்து
யுதிட்டிரரை மன்னர் பலர் சென்று கண்டது
நாட்டின்கண் வாழ்வை துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ விருந்தானை காட்டில்
பெருந்தகையை கண்டார்கள் பேரெழிற்றோள் வேந்தர்
வருந்தகையா ரெல்லோரும் வந்து
யுதிட்டிரரிடம் பிரகதசுவர் என்னும் முனிவர் வந்தது
கொற்றவேல் தானை குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞால திருள்நீங்க முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லா தந்தான்
மொழிமுறையே கோத்த முனி
மறைமுதல்வ நீயிங்கே வந்தருள பெற்றேன்
பிறவி பெருந்துயர மெல்லாம் அறவே
பிழைத்தேன்யா னென்றான பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு
மெய்த்திருவ துற்றாலும் வெய்ந்துயர்வ
ஒத்திருக்கும் உள்ள துரவோனே சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையா லுள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து
அம்பொற் கயிலைக்கே யாக தரவணிவார்
தம்பொற் படைக்கு தமியனா எம்பியைமுன்
போக்கினே னென்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினே ரில்லாத மன்
காண்டா வனந்தீ கடவுளுண கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு மீண்டமரர்
தாளிரண்டும் நோவ தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டு மன்றோ துணை
பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டு
சேர்வரிய வெங்கானஞ் சேர்தற்கு காரணந்தான்
யாதோவ பாவென்றா னென்றுந்தன் வெண்குடைக்கீழ்
தீதோவ பார்காத்த சேய்
கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர கியல்பேகாண் வாடி
கலங்கலைநீ யென்றுரைத்தான் காமருவு நாடற்
கிலங்கலைநூன் மார்ப னெடுத்து
கண்ணிழந்து மா கவறாடி காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்
முனிவர் நளசரிதம் கூறுதல்
சேமவேன் மன்னற்கு செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் யா
தொலியாழி வைய மொருங்கிழ பண்டு
கலியால் விளைந்த கதை
சுயம்வர காண்டம்

நிடதநாட்டு சிறப்பு
காமர் கயல்புரழ காவி முகைநெகிழ
தாமரையின் செந்தேன் றளையவிழ பூமடந்தை
தன்னாட்டம் போலு தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு
மாவிந்தநகர சிறப்பு
கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீத களப செழுஞ்சேற்றால் வீதிவாய்
மான கரிவழுக்கும் மாவிந்த மென்பதோர்
ஞான கலைவாழ் நகர்
நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் தென்றல்
அலர்த்துங் கொடிமாட தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து
வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்வி டரற்றுவன கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு
தெரிவனநூ லென்று தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு
மாமனுநூல் வாழ வருச திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகு தடந்தோளான் காமருபூ
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி
அந்நாட்டு மன்னன் நளன் சிறப்பு
ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வ பெடைவண்டோ டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்கு தண்தார்
அருகுடையான் வெண்குடையா னாங்கு
சீத மதிக்குடைக்கீழ செம்மை அறங்கிடப்ப
தாதவிழ்பூ தாரான் தனிக்காத்தான் மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ வுலகு
நளன் பூஞ்சோலை சென்றமை
வாங்குவளை கையார் வதன மதிபூத்த
பூங்குவளை காட்டிடையே போயினான் தேங்குவளை
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடி சோலை புக
வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர நின்ற
தளவேனல் மீதலரு தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர்
தேரின் துகளை திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலு தூங்கிருள்வெய் யோற்கொதுங்கி
புக்கிருந்தா லன்ன பொழில்
சோலையில் அன்னப்புள் வந்ததும் அதனை மங்கையர் பற்றி அரசன்முன் வைத்தலும்
நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கை தலஞ்சிவப்ப மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரி தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே யாங்கு
பேதை மடவன்ன தன்னை பிழையாமல்
மேதி குலவேறி மென்கரும்பை கோதி
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா வென்றான் பெயர்ந்து
நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து
அன்ன தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையை தேடி
கலங்கிற்றே மன்னவனை கண்டு
அஞ்சல் மடவனமே உன்றன் னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் விஞ்சியது
காண பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாண பிடித்ததார் மன்
செய்ய கமல திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டு
தடுமாற்ற தீர்ந்ததே தான்
அன்னம் தமயந்தியின் சிறப்புரைத்தமை
திசைமுகந்த வெண்கவிதை தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளு கிசைவாள் வசையில்
தமையந்தி யென்றோது தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு
அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்கு
கன்னி மனக்கோயில் கைக்கொள்ள சொன்னமயில்
ஆர்மடந்தை யென்றா னனங்கன் சிலைவளை
பார்மடந்தை கோமான் பதைத்து
எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்ட
கொழுநுதியிற் சாய்ந்த குவளை உழுநர்
மடைமிதிப்ப தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு
நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு
மோட்டிளங் கொங்கை முடி சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு நாட்டேன்
அலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு
என்றும் நுடங்கு மிடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்று காற்றாது தேய்ந்து
செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்
நளன் தமயந்திபால் காதல் கொண்டது
அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து
பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்க காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத
நடைகற்பான் வந்தடைந்தே யாம்
இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண் மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்கா
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து
அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறி தமயந்திபால் சென்றது
வீமன் திருமடந்தை மென்முலையை யுன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் சேம
நெடுங்குடையா யென்றுரைத்து நீங்கியதே யன்னம்
ஒடுங்கிடையாள் தன்பா லுயர்ந்து
நளனது விரக தாபம்
இவ்வளவிற் செல்லுங்கொ லிவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காத லியம்புங்கொல் இவ்வளவில்
மீளுங்கொ லென்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை யரசு
சேவல் குயிற்பெடைக்கு பேசுஞ் சிறுகுரல்கே
டாவி யுருகி யழிந்திட்டான் பூவின்
இடையன்னஞ் செங்கா லிளவன்னஞ் சொன்ன
நடையன்ன தன்பா னயந்து
அன்ன முரைத்த குயிலு கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட முன்னதனை
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம்
வாரணியுங் கொங்கை மடவார் நுடங்கிடைக்கு
பேருவமை யாக பிறந்துடையீர் வாரீர்
கொடியா ரெனச்செங்கை கூப்பினான நெஞ்சம்
துடியா நெடிதுயிரர சோர்ந்து
தமயந்தி அன்னத்தை நோக்கி வினாவியது
மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போ கன்னி யருகணைய நன்னுதலும்
தன்னாடல் விட்டு தனியிடஞ்சேர தாங்கதனை
என்னாடல் சொல்லென்றா ளீங்கு
அன்னம் நளன் சிறப்புரைத்தல்
செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கு தடந்தோளான் மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு
அறங்கிடந்த நெஞ்சு மருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோ ள் வலியும் நிலங்கிடந்த
செங்கண்மா லல்லனேல் தேர்வேந்த ரொப்பரோ
அங்கண்மா ஞால தவற்கு
தமயந்தி நளன்பால் கொண்ட காதற்றிறம்
புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதி பொன்
மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தை பாரா
மயங்கினா ளென்செய்வாள் மற்று
வாவி யுறையும் மடவனமே யென்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியால் காவினிடை
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து
தோழியர் தமயந்தியின் நிலை வேறுபாட்டை தாய்க்குரைக்க அவள் அரசனுக்கு அறிவித்தது
கொற்றவன்தன் தேவிக்கு கோமகந்தன் தோழியர்கள்
உற்ற தறியா வுளநடுங்கி பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனை
கூறினாள் பெற்ற கொடி
வீமராசன் தமயந்தி மாளிகைக்கு வந்தது
கருங்குழலார் செங்கையினால் வெண்கவரி பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப நெருங்கு
பரிவளை நின்றேங்க போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை
தமயந்தி தந்தையை வணங்கியது
கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்க
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் மீதெல்லாம்
காந்தாரம் பாடி களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதி பொன்
வீமன் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்படுத்தியது
பேரழகு சோர்கின்ற தென்ன பிறைநுதன்மேல்
நீரரும்ப தன்பேதை நின்றாளை பாரா
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்
மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான் பைங்கமுகின்
கூந்தன்மேற் கங்கை கொழுந்எதாடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு
சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை
மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தா தரிச்ச திரன்சுவர்க்கி நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்ன பரந்ததே
கோவேந்தர் செல்வ குழாம்
புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமு மினிதுறைந்தார் தெள்ளரிக்கண்
பூமகளை பொன்னை பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளை தம்மனத்தே கொண்டு
நளன் அன்னம் திரும்பிவர கண்டது
வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோக சுழிமேல்தா
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர
முகம்பார தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கு மற்றாரை போல மிகுங்காதல்
கேளா விருந்திட்டா னன்னத்தை கேளாரை
வாளால் விருந்திட்ட மன்
நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்
அன்ன குலத்தி னரசே அழிகின்ற
என்னுயிரை மீள வெனக்களித்தாய் முன்னுரைத்த
தேமொழிக்கு தீதிலவே யென்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலா னெடுத்து
கொற்றவன்ற னேவலினாற் போ குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகே டரசற்
கழிந்ததே யுள்ள அறிவு
நளனது காதல் நோய் நிலை
கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து
வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது
கோதை சுயம்வரநாள் கொற்றவனு குற்றுரைப்ப
ஏதமிலா காட்சியர்வ தெய்தினார் போதில்
பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்
காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவி
தேவலிற்போ யீதென் றியம்புதலும் மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து
நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது
கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை யேரடித்த கட்டி
கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு
விரையத்தே ரூரென்றான் வேந்து
சடைச்செந்நெல் பொன்விளைக்கு தன்னாடு பின்னா
கடல்தானை முன்னா கண்டான் அடற்கமைந்த
வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்
நாரதமுனிவர் வானுலகு சென்றது
நெற்றி தனிக்கண் நெருப்பை குளிர்விக்கும்
கொற்ற தனியாழ குலமுனிவன் உற்றடைந்தான்
தேனாடு தெய்வ தருவு திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு
இந்திரன் நாரதரை வினாவியது
வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரு மிலராலென் றையுற்று நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து
நாரதர் தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது
வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து மாமன்னர்
போயினா ரென்றான் புரந்தரற்கு பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்
அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு
அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது
மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து
நளனை தேவர்கள் வழியில் கண்டது
பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனை தேடுவான் முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானை கண்டார்
பெருவானிற் றேவர் பெரிது
இந்திரன் நளனை தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது
காவற் குடைவேந்தை கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவற் றொழிலு கிசையென்றான் ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை
இன்னதென றோரா திசைந்து
செங்கண் மதயானை தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் மங்கைபால்
தூதாக வென்றான தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றான கோ
தேவர் பணிதலைமேற் செல்லு திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் பாவில்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலு தண்குடையான் நெஞ்சு
ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்
தேவர்கோ னே திருநகரிற் காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ள தவன்
வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையை
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் யாருமுனை
காணார்போய் மற்றவளை காணென்றான் கார்வண்டின்
பாணாறு தாரானை பார்த்து
நளன் தூது சென்றதும் தமயந்தியை கண்டதும்
இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமாந்தன் நாடு
தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலர
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு
மதுநோக்கு தாரானும் வாள்நுதலு தம்மில்
பொதுநோ கெதிர்நோக்கும் போது
நளனை கண்ட தமயந்தி நிலை
நீண்ட கமலத்தை நீல கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கி
கற்பின்தாழ் வீழ்ந்த கதவு
உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்ன னழகு
மன்னாக துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளி புல்லுவனென் றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணா தறி
தமயந்தி நளனை யாவனென வினாவியது
காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்
யாவனோ விஞ்சை கிறைவனோ தேவனோ
உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு
நளனது மறுமொழி
தீராத கா தழலைத்தன் செம்மையெனும்
நீரா லவித்து கொடுநின்று வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்
என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே
ஊட்டுவா னெல்லா முரைத்து
தமயந்தி கூறிய உறுதிமொழி
இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து
போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே சோதி
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க வென்றா ளெடுத்து
வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலை
தானணுகி மீண்டபடி சாற்றவே தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்ப கலந்து
நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்
விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த பெண்ணங்கின்
வன்மொழியு தேவர் மனமகிழ தான்மொழிந்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு
அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே சங்கையற
பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்
மற்றோனு மீந்தார் வரம்
தமயந்தியின் துயர நிலை
தூதுவந்த காதலனை சொல்லி செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் யாதும்
அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்
வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து
உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்க சோர்ந்தா ளுயிர்
பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலு மவ்வழியே பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்
ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து
சூரியன் அத்தமித்தல்
வையம் பகலிழப்ப வானம் ஒளியிழ
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழ பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்ப சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு
மாயிரு ஞால துயிர்காண வானரங்கில்
பாயிரு ளென்னும் படாம்வாங்கி சேய்நின்
றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை
மாலைப்பொழுதின் வரவு
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்தி பொழுது
புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் முற்கொண்
டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போ லின்று
பிறையின் தோற்றம்
பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலை
பெய்வா னமைந்த பிறை
கூட்டுமைபோற் சிறந்த கூரிருளை கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் ஈட்டுமணி
பூணிலா மென்முலைமேற் போத சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு
தமயந்தியின் துயர நிலை
அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவின் மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வ தேனென்னும் பேர்
கொப்புளங் கொங்கைமீர் திங்க சுடர்பட்டு
கொப்புளங் கொண்ட குளிர்வானை இப்பொழுது
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து
கானு தடங்காவுங் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் மீன
கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய்
கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் உள்ளம்
கொடிதிரா வென்னுங் குழையு தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று
வெங்கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ
கொங்கை யனலிற் கொளுந்தியோ திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா
ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் ஆழி
துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற
வெயிலா லுடலுருகா வீழ்ந்து
ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் ஓடி
பொறையாக சோர்வாள் பொறுக்குமோ மோக
துறைவா யடங்கா துயர்
ஈர மதியே இளநிலவே யிங்ஙமேன
சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்
பொரவளித்தான் கண்ணி யுனக்கு புலரா
இரவளித்தா னல்லனோ இன்று
தாங்கு நிலவின் தழல்போ தலைக்கொள்ள
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியா தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று
மையிட்ட கண்ணருவி வார வளைசோர
கையிற் கபோல தலம்வைத்து மெய்வருந்தி
தேனிருந்த பூங்கணையே தீயாக தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்
இருளின் மிகுதியும் தமயந்தியின் துயரமும்
அள்ளி கொளலா யடை திரண்டொன்றா
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா
ஊக்கிய சொல்ல ரொலிக்கு துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் காக்க
இடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்
புடைவா யிருள்புடைத்தாற் போன்று
சேமங் களிறுபுக தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஓவாது முந்நீ ருலகு
ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பே
தோன்றுங் கழுது துயின்றதே தான்தன்
உரைசோர சோர வுடல்சோர வாயின்
இரைசோர கைசோர நின்று
அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் இன்று
தவிர்ந்ததே போலரற்றி சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு
ஏழுலகுஞ் சூழிருளா யென்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயர மேதென் றறிகிலேன் பாழி
வரையோ எனுநெடுந்தோண் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்
கருவிக்கு நீங்காத காரிருள்வா கங்குல்
உருவி புகுந்ததா லூதை பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட வுயிர்க்கு
எழுந்திருக்கு மேமாந்து பூமா தவிசின்
விழுந்திருக்கு தன்னுடம்பை மீள செழுந்தரள
தூணோடு சேர்க்கு துணையேது மில்லாதே
நாணோடு நின்றழியும் நைந்து
விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போற் சோரும் புரிகுழலை
தாங்கு தளரு தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்கு துயரோ டிருந்து
மயங்கு தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே யுலாவும் வயங்கிழைபோ
சோரு துயிலு துயிலா கருநெடுங்கண்
நீருங் கடைசோர நின்று
உடைய மிடுக்கெல்லா மென்மேல் ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்த மின்னருளோ
ஏகாத தென்னோ இரா
விழுது படத்திணிந்த வீங்கிருள்வா பட்டு
கழுதும் வழிதேடுங் கங்குற் பொழுதிடையே
நீருயிர்க்குங் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு முண்டோ அரண்
பொழுது புலர்ந்தமை
பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்ப
காசினியு தாமரையுங் கண்விழிப்ப வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயர தோடு
புலர்ந்ததே யற்றை பொழுது
சூரியோதயம்
வில்லி கணையிழப்ப வெண்மதியஞ் சீரிழப்ப
தொல்லை யிருள்கிழி தோன்றினான் வல்லி
மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று
முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசுங் கலந்து
நளன் சுயம்வர மண்டபம் வந்தமை
மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்
தமயந்தி சுயம்வர மண்டபம் வந்தது
நித்திலத்தின் பொற்றோடு நீலமணி தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அங்கு
பேதை மடமயிலை சூழும் பிணைமான்போல்
கோதை மடமானை கொண்டணைந்த மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து
மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் மின்னிறத்து
செய்யதாள் வெள்ளை சிறையன்னஞ் செங்கமல
பொய்கைவாய் போவதே போன்று
வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஐவாளி நாணின்பால் இட்டு
தோழி தமயந்திக்கு அங்கு வந்திருந்த அரசர்கள்
ஒவ்வொருவரையும் குறிபிட்டுரைத்தல்
மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்கு காட்டினாள்
தேர்வேந்தர் தம்மை தெரிந்து
சோழ மன்னன்
பொன்னி யமுத புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவு திருநாடன் பொன்னின்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்
பாண்டிய மன்னர்
போர்வாய் வடிவேலாற் போழ படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் பார்வா
பருத்ததோர் மால்வரையை பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய்
சேர மன்னன்
வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயுங் குடநாடன் நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மான தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து
குரு நாட்டரசன்
தெரியில் யிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி இரவெல்லாம்
பிள்ளை குருகிரங்க பேதைப்புள் தாலாட்டும்
வள்ளை குருநாடர் மன்
மத்திர நாட்டரசன்
தேமருதார காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தை தாமரைதன்
பத்திரத்தா லேற்கும் படுகர பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்
மச்ச நாட்டரசன்
அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த செஞ்சாலி
பச்சைத்தாள் மேதி கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன்
அவந்தி நாட்டரசன்
வண்ண குவளை மலர்வௌவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்து பைங்குவளை உண்ணா
தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன்
பாஞ்சால மன்னன்
விடக்கதிர்வேற் காளை யிவன்கண்டாய் மீனின்
தொடக்கொழி போய்நிமிர்ந்த தூண்டின் மடற்கமுகின்
செந்தோடு பீறத்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடு பாஞ்சாலர் மன்
கோசல மன்னன்
அன்ன துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெ லரிவார் சினையாமை வன்முதுகில்
கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயி சேய்
மகத நாட்டரசன்
புண்டரிக தீயெரிவ போல்விரி பூம்புகைபோல்
வண்டிரியு தெண்ணீர் மகதர்கோன் எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியா பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயி சேய்
அங்க நாட்டரசன்
கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவழ கோடிடறி
தேன்கழியில் வீழ திரைக்கரத்தால் வான்கடல்வ
தந்தோ வெனவெடுக்கு மங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயி சேய்
கலிங்கர் கோன்
஦த்ள்வாளை காளைமீன் மேதி குலமெழுப்ப
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கி புள்ளோடு
வண்டிரி செல்லும் மணிநீர கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்
கேகயர் கோன்
அங்கை வரிவளையா யாழி திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தை தீண்டிப்போய் கங்கையிடை
சேல்குளிக்குங் கேகயர்கோன் றெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து
காந்தார வேந்தன்
மாநீர் நெடுங்கயத்து வள்ளை கொடிமீது
தனேகு மன்ன தனிக்கயிற்றில் போநீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன்
சிந்து நாட்டரசன்
அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வா
சங்கம் புடைபெயர தான்கலங்கி செங்கமல
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்கு தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்
தேவர்கள் நளனுருவில் இருக்க தமயந்தி கண்டு தியங்கியது
காவலரை தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவா சென்றிருந்தார் பூவரைந்த
மாசிலா பூங்குழலாள் மற்றவரை காணநின்று
ஊசலா டுற்றா ளுளம்
பூணு கழகளிக்கும் பொற்றொடியை கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நள்னுருவா போந்து
தமயந்தியின் சூளுரை
மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை அன்னந்தான்
சொன்னவனை சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனை தன்மனத்தே கொண்டு
தமயந்தி நளனை அறிந்தமை
கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு
தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியது
விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளி
கண்ணகன் ஞாலங் களிகூர மண்ணரசர்
வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தை
பொன்மாலை சூட்டினாள் பொன்
மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை
திண்டோ ள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே ஒண்டாரை
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது
நளன் தமயந்தியுடன் சென்றமை
மல்லல் மறுகின் மடநா குடனாக
செல்லும் மழவிடைபோற் செம்மாந்து மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன்
தேவர்கள் கலி எதிர்வர கண்டது
வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தை புன்னெறியி லாக்கும்
இருங்கலியை கண்டா ரெதிர்
இந்திரன் கலியின் வரவு வினாவியதும் மறுமொழியும்
ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவ
தீங்கு தருகலியுஞ் செப்பினான் நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான்
மன்னவரில் வைவேல் நளனே மதிவதன
கன்னி மணமாலை கைக்கொண்டான் உன்னுடைய
உள்ள கருத்தை யொழித்தே குதியென்றான்
வெள்ளை தனியானை வேந்து
விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசற் கீந்த மடமாதின் எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்தற்க்குங் கீழ்மை
கொடுக்கின்றே னென்றான் கொதித்து
வாய்மையுஞ் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் பூமான்
நெடுங்கற்பு மற்றவற்கு நின்றுரைத்து போனான்
அருங்கொற்ற வச்சிரத்தா னாங்கு
நளனை கெடு கலி துவாபரனை துணைவேண்டியது
செருக்கதிர்வேற் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்க தரியேன் இவரை பிரிக்க
உடனாக என்றா னுடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு
சூரியோதயம்
வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் றேர்
தமயந்திக்கு செய்த மணக்கோலம்
இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகை தாமே புதைப்பார்போல் மென்மலரும்
சூட்டினார் சூட்டி துடிசே இடையாளை
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்
நளதமயந்தியர் திருமணம்
கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் பணிமொழியார்
குற்றேவல் செ கொழும்பொன் னறைபுக்கார்
மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து
நளதமயந்தியர் கூடிமகிழ்ந்தமை
செந்திருவின் கொங்கையினு தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையை கால்வளைத்து வெந்தீயும்
நஞ்சு தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சு தொடுத்தா னவன்
ஒருவர் உடலில்
இருவ ரெனும்தோற்ற மின்றி பொருவெம்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று
குழைமேலுங் கோமா னுயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள விழைமேலே
அல்லோடும் வேலான் அகல தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து
வீரனக லச்செறுவின் மீதோடி குங்குமத்தின்
ஈர விளவண்ட லிட்டதே நேர்பொருத
காராரும் மெல்லோதி கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து
கொங்கை முகங்குழை கூந்தல் மழைகுலை
செங்கையற்க ணோடி செவிதடவ அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து
தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்க துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலு தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு
சுயம்வர காண்டம் முற்றும்

கலிதொடர் காண்டம்

நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை
தவள தனிக்குடையின் வெண்ணிழலு தையல்
குவளை கருநிழலுங் கொள்ள பவள
கொழுந்தேறி செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரி லேறினான் சென்று
நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளை காட்டுதல்
மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடை
பொங்கி யெழுந்த பொறிவண்டு கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்
பாவையர்கை தீண்ட பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலு பூங்கொம்பு மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து
மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை
பங்கயமென் றெண்ணி படிவண்டை செங்கையால்
காத்தாள கைம்மலரை காந்தளென பாய்தலுமே
வேர்த்தாளை காணென்றான் வேந்து
புல்லும் வரிவண்டை கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து மெல்லப்போய்
அம்மலரை கொய்யா தருந்தளிரை கொய்வாளை
செம்மலரில் தேனே தெளி
கொய்த மலரை கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடை
காதார மில்லா தறிந்து
ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவி
தோற்ற வமளியென தோற்றுமால் காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து
அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லி கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே
அல்லென்ற சோலை யழகு
கொங்கை முகத்தணை கூட்டி கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்
கொய்த குவளை கிழித்து குறுநுதன்மேல்
தனிவைத்த ஏந்திழையாள் வையத்தார்
உண்ணா கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானை போன்றனளே காண்
கொழுநன் கொழுந்தாரை நீர்வீச கூசி
செழுமுகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமியவ
கோமகற்கு தானினைந்த குற்றங்க ளத்தனையும்
பூமகட்கு சொல்லுவாள் போல்
பொய்தற் கமலத்தின் போதிரண்டை காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் எய்த
வருவாளை பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளை பார்துவக்குஞ் சேய்
பொன்னுடைய வாச பொகுட்டு மலரலை
தன்னுடனே மூழ்கி தனித்தெழுந்த மின்னுடைய
பூணாள் திருமுகத்தை புண்டரிக மென்றயிர்த்து
காணா தயர்வானை காண்
சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்த கையால்
முறுக்குநெடு மூரி குழலும் குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியை கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்
சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேக திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு
செழுநீலம் நோக்கெறிப்ப செங்குவளை கொய்வாள்
முழுநீல மென்றயிர்த்து முன்னர கழுநீரை
கொய்யாது போவாளை கோல்வளைக்கு காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்
நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது
காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடி தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தா ருவந்து
நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் இறைவளைக்கை
சிற்றிடையாய் பேரின்ப தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றி பொழில்
தமயந்தியின் ஊடல்
கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற மன்னவனே
இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா
ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து
தொண்டை கனிவாய் துடிப்ப சுடர்நுதன்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்ப கெண்டை
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளை
குடைசிவப்ப நின்றான் கொடி
தங்கள் புலவி தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாட கண்டானோர் கூத்து
தமயந்தி புலவி தவிர்த்தது
சில்லரி கிண்கிணிமென் தெய்வமலர சீறடியை
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் வல்லை
முழுநீல கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறா சிவப்பு
ஊடல் நீங்கி தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது
அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டி குறுவியர்நீர் அங்கடைத்து
காதல் வரம்பொழுக்கி கா பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு
நள தமயந்தியர் கங்கை கண்டது
வேரி மழைதுளிக்கு மே கருங்கூந்தல்
காரிகையு தானும்போ கண்ணுற்றான் மூரி
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறுங் கங்கை கரை
அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது
சூத கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்குங் குப்பியென மாதரார்
ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன்
நளன் தமயந்திக்கு தன் வளநகரை காட்டியது
வான்தோய நீண்டுயர்ந்த மாட கொடிநுடங்க
தான்தோன்று மற்றின் தடம்பதிதான் வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே யெங்கள் நகர்
நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது
பொய்கையும் வாச பொழிலு மெழிலருவ
செய்குன்று மாறு திரிந்தாடி தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரை
கூறிரண்டா கொல்யானை கோ
தமயந்தியின் மக்க பேறு
கோல நிறம்விளர்ப்ப கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப நூலென்ன
தோன்றாத நுண்மருங்குல் தோன்ற சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி யிரண்டு
கலி நளனை சார முடியாதிருந்தது
ஆண்டிரண்டா றெல்லை யளவு திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் நீண்டபுகழ
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு
கலி நளனை சேர்ந்தது
சந்திசெ தாள்விளக்க தாளின்மறு தான்கண்டு
புந்தி மகிழ புகுந்துகலி சிந்தையெலாம்
தன்வயமே ஆக்கு தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து
நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் பாராளும்
கொற்றவனை பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனை சேர்ந்தான் கலி
கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது
நன்னெறியில் சூதால் நளனை களவியற்றி
தன்னரசு வாங்கி தருகின்றேன் மன்னவனே
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகு
கேதுவாய் நின்றா னெடுத்து
புட்கரன் உடன்பட்டு கலியுடன் சென்றது
புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி யிளமேதி காற்குளம்பு பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாட போயினான்
கொல்லேற்றின் மேலேறி கொண்டு
புட்கரன் நிடத நாடடைந்தது
வெங்க சினவிடையின் மேலேறி காலேறி
கங்கை திரைநீர் கரையேறி செங்கதிர்ப்பைம்
பொன்னொழி போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழி போந்தான் பெயர்ந்து
நளன் புட்கரனை கண்டு வினாவிய்து
அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி யென்னகொடி யென்ன மிடற்சூது
வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்
செல்லுங் கொடியோன் தெரிந்து
நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது
ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து
நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது
காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்த லிவைகண்டாய் போதில்
சினையாமை வைகு திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி
அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளை தேய்க்கும் மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து
உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மை
திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து
ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு
நளனது மறுப்புரை
தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று
புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது
நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் துறையில்
கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானி போது
நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்
விட்டொளிர்வில் வீசி விளங்குமணி பூணாரம்
ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து
காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயு தோளான் தனிமனம்போல் நேரே
தவறா புரண்ட தமையனொடுங் கூடி
கவறா புரண்டான் கலி
வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகை
கொத்த பணைய முரையென்ன வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாக தோற்றானவ் வேந்து
பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேரு தோற்றதற்பின் வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை
பின்றோற்று தோற்றான் பிடி
சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் சூதரங்கில்
பாவையரை செவ்வழியாழ பண்ணின்மொழி பின்னுகுழல்
பூவையரை தோற்றான் பொருது
கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கி
சிறியானை சேர்ந்தாள் திரு
புட்கரன் தமயந்தியை பந்தயமாக வைக்ககேட்டது
மனைக்குரியா ரன்றே வருந்துயர தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையை தேனால் நனைக்கும்
குவளை பணைப்பைந்தா குண்டுநீர் நாடா
இவளை பணையந்தா வின்று
நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது
இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டி
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே பனிச்சூத
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போது மென்றான் நளன்
நளன் நகரைவிட்டு சென்றது
மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரை
புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் தன்கால்
பொடியாட தேவியொடும் போயினா னன்றே
கொடியானு கப்பார் கொடுத்து
கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வ்லி
நகரமாந்தரின் வேண்டுகோள்
ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை
யார்காக்க போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்
நீர்வார்த்து கால்கழுவா நின்று
வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால் சீலம்
ஒழிவரோ செம்மை யுரைதிறம்பா செய்கை
அழிவரோ செங்கோ லவர்
வடியேறு கூரிலைவேன் மன்னாவோ வுன்றன்
அடியேங்க காதரவு தீர கொடிநகரில்
இன்றிருந்து நாளை யெழுந்தருள்க வென்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து
மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமே தன்மனத்தில் வைத்து
புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது
வண்டாடு தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடி னார்தம்மை கொல்லென்று தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று
அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதைமையை நோக்கி முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றுங் கூரிலைவேன் மன்
நளன் தமயந்தியும் மக்களும் தொடர நகர் நீங்கியது
தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர
பொன்வாயில் பின்னாக போயினான் முன்னாளில்
பூமகளை பாரினொடு புல்லினான் கன்மகனை
கோமகளை தேவியொடுங் கொண்டு
நகரின் துயர நிலை
கொற்றவன்பாற் செல்வாரை கொல்வான் முரசறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும்
இழவு படுமாபோ லில்லங்க டோ றும்
குழவிபா லுண்டிலவே கொண்டு
நளனுடைய மக்களின் துயரநிலை
சந்த கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரு நோவ பதைத்துருகி எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து
தூயதன் மக்கள் துயர்நோக்கி சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி யாதும்
தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து
நளன் தமயந்தியை மக்களுடன் குண்டினபுரம் கூறியது
காத லிருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போ
கேத முடைத்திவரை கொண்டுநீ மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளை தான்
தமயந்தியின் மறுமொழி
குற்றமில் காட்சி குதலைவாய் மைந்தரையும்
பெற்று கொளலாம் பெறலாமோ கொற்றவனே
கோக்கா தலனை குலமகளு கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து
நளன் மக்க பேற்றின் சிறப்பை கூறியது
கைதவந்தான் நீக்கி கருத்திற் கறையகற்றி
செய்தவந்தா னெத்தனையுஞ் செய்தாலும் மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்கு
புகப்பெறார் மாதராய் போந்து
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ இன்னடிசில்
புக்களையு தாமரைக்கை பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்
சொன்ன கலையின் துறையனைத்து தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தா மின்முகத்து முன்னம்
குறுகுதலை கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வா
சிறுகுதலை கேளா செவி
தமயந்தி நளனை தன் தந்தை நகருக்கு வருமாறு அழைத்தது
போற்றரிய செல்வம் புனனா டொடும்போக
தோற்றமையும் யாவர்க்கு தோற்றாதே ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமல
செம்பதிக்கே வீற்றிருந்த தேன்
நளன் அதற்கு உடன்படாது உரைத்தது
சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் தனக்குரிய
தான துடைத்து தருமத்தை வேர்பறித்து
மான துடைப்பதோர் வாள்
மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுத தேக்கி யிருப்பரேல் சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
வரும்பேடை மானே யவர்
தமயந்தி மக்களையேனும் தன் தந்தையிடம் அனுப்ப வேண்டிக்கொண்டது
செங்கோலா யுன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்ப னெழினகர்க்கே நங்கோல
காதலரை போக்கி யருளென்றாள் காதலரு
கேதிலரை போல வெடுத்து
நளன் தன் மக்களை அனுப்ப உடன்பட்டது
பேதை பிரி பிரியாத பேரன்பின்
காதலரை கொண்டுபோ காதலிதன் தாதைக்கு
காட்டுநீ யென்றான் கலங்காத வுள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து
மக்களின் பிரிவாற்றா துயரநிலை
தந்தை திருமுகத்தை நோக்கி தமைப்பயந்தாள்
இந்து முகத்தை யெதிர்நோக்கி எந்தம்மை
வேறாக போக்குதிரோ வென்றார் விழிவழியே
ஆறா கண்ணீ ரழுது
அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவர்க்கு
மஞ்சனநீ ராக வழிந்தோட நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாண் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து
மக்களை ஒரு மறையோன் அழைத்து சென்றது
இருவ ருயிரு மிருகையான் வாங்கி
ஒருவன்கொண் டேகுவா னொத்து அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக்கொண் டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து
காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை யெனநின் றுயிர்ப்போட யாதும்
உரையாடா துள்ள மொடுங்கினான் வண்டு
விரையாடு தாரான் மெலிந்து
நளதமயந்தியர் ஒரு பாலைநிலத்தை கண்ணுற்றது
சேலுற்ற வாவி திருநாடு பின்னொழி
காலிற்போ தேவியொடுங் கண்ணுற்றான் ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவுங் கண்மணிகள் தாம்பொடியா
துள்ளிவே கின்ற சுரம்
கலி ஒரு பொற்புள்ளாய் அங்கு தோன்றியது
கன்னிறத்த சிந்தை கலியுமவன் முன்பாக
பொன்னிறத்த புள்வடிவா போந்திருந்தான் நன்னெறிக்கே
அஞ்சிப்பா ரீந்த அரசனையு தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து
அப்பொற்புள்ளை தமயந்தி விரும்பியது
தேன்பிடிக்கு தண்துழா செங்க கருமுகிலை
மான்பிடிக்க சொன்ன மயிலேபோல் தான்பிடிக்க
பொற்புள்ளை பற்றித்தா வென்றாள் புதுமழலை
சொற்கிள்ளை வாயாள் தொழுது
நளன் அப்பறவைஅயி பிடிக்க முயலுதல்
பொற்புள் ளதனை பிடிப்பான் நளன்புகுத
கைக்குள்வரு மாபோற் கழன்றோடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணினான் மன்
கொற்ற கயற்க கொடியே யிருவோரும்
ஒற்றை துகிலா லுடைபுனைந்து மற்றிந்த
பொற்றுகிலாற் புள்வளைக்க போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து
நளன் தன் ஆடையால் புள் வளைத்தது
எற்றி திரைபொரநொ தேறி யிளமணலில்
பற்றி பவழம் படர்நிழற்கீழ் முத்தீன்று
வெள்வளைத்தா யோடுநீர் வேலை திருநாடன்
புள்வளைத்தா னாடையாற் போந்து
அப்புள் வானில் அவ்வாடையுடன் எழுந்து கூறியது
கூந்த லிளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று வேந்தனே
நன்னாடு தோற்பித்தோண் நானேகா ணென்றதே
பொன்னாடு மாநிறத்த புள்
நளதமயந்தியர் இருவரும் ஓராடையே கொண்டமை
காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோ காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே பூவிரி
கள்வேட்டு வண்டுழலுங் கான திடைக்கனக
புள்வேட்டை யாதரித்த போது
தமயந்தி கலியை சபித்தது
அறம்பிழைத்தார் பொய்த்தா ரருள்சிதைத்தார் மான
திறம்பிழைத்தார் தெய்வ மிகழ்ந்தார் புறங்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொ லென்றழியா
நின்றாள் விதியை நினைந்து
தமயந்தி தாம் அவ்விடம்விட்டு நீங்க விரும்பியது
வை துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனி செங்கோலா யிங்கொழி
போந்தருளு கென்றாள் புலந்து
சூரியாத்தமயம்
அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன்
நளதமயந்தியர் இருளூடே கானிற் சென்றது
பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்கு தோன்றா விருள்
ஒரு பாழ்மண்டபம் அடைந்தது
எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து
மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரு மிடமற்று தானில்லை சோர்கூந்தல்
மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயில
போதரா யென்றான் புலர்ந்து
தமயந்தியின் துயரநிலை
வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வ செவிகொதுகின் சில்பாடல் இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோர
தோட்டவார் கோதையாள் சோர்ந்து
நளன் தமயந்தியை தேற்றியது
பண்டை வினைப்பயனை பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் கெண்டை
வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனீ யென்றா னரசு
மீண்டும் தமயந்தி வருந்தியது
விரைமலர்ப்பூ மெல்லணையு மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி யறையும் அரசேநான்
காணேனிங் கென்னா கலங்கினாள் கண்பனி
பூணேர் முலையாள் புலர்ந்து
நளன் தமயந்தியை கண்ணுறங்குமாறு கூறியது
தீய வனமு துயின்று திசைஎட்டுமேதுயின்று
பேயு துயின்றதாற் பேர்யாமம் நீயுமினி
கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து
மண்மேற் றிருமேனி வைத்து
நளனது துயரம்
புன்கண்கூர் யாமத்து பூழிமேற் றான்படுத்து
தன்கண் துயில்வாளை தான்கண்டும் என்கண்
பொடியாதா லுள்ளாவி போகாதால் நெஞ்சம்
வெடியாதா லென்றான் விழுந்து
தமயந்தியின் துயரம்
முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர
மீண்டும் நளனது துயரம்
வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா
தாம மெனக்களித்த தையலாள் யாமத்து
பாரே யணையா படைக்கண் துயின்றாள்மற்
றாரோ துயரடையா ராங்கு
கலி நளன் மன உறுதியை கலைத்தது
பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரி பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் பொய்ம்மை
விலக்கினா னெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்ச கலி
வஞ்ச கலிவலியான் மாக தராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் விஞ்ச
மதித்ததேர