சயங்கொண்டார் இயற்றிய
கலிங்கத்து பரணி
©
சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்து பரணி

உள்ளுறை
கடவுள் வாழ்த்து
கடை திறப்பு
காடு பாடியது
கோயில் பாடியது
தேவியை பாடியது
பேய்களை பாடியது
இந்திர சாலம்
இராச பாரம்பரியம்
பேய் முறைப்பாடு
அவதாரம்
காளிக்கு கூளி கூறியது
போர் பாடியது
களம் பாடியது
சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்து பரணி
கடவுள் வாழ்த்து
உமாபதி துதி

புயல்வண்ணன் புனல்வார்க்க பூமிசையோன்
தொழில்காட்ட புவன வாழ்க்கை
செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளை
புணர்ந்தவனை சிந்தை செய்வாம்

அருமறையி னெறிகாட்ட வயன்பயந்த
நிலமகளை யண்டங் காக்கும்
உரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோ
தமனபயன் வாழ்க வென்றே
திருமால் துதி

ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்கு
திருவயிற்றிற் றொருகுழவி திருநாமம் பரவுதுமே

அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகை
இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே
நான்முகன் துதி

உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்கு
முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே

நிலநான்கு திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்
குலநான்குங் காத்தளிக்குங் குலதீபன் வாழ்கவென்றே
சூரியன் துதி

பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க
ஓராழி தனைநடத்து மொண்சுடரை பரவுதுமே

பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்க
தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே
கணபதி துதி

காரணகா ரியங்களின்க டறுப்போர் யோ
கருத்தென்னு தனித்தறியிற் கட்ட கட்டுண்
டாரணமா நாற்கூட தணைந்து நிற்கும்
ஐங்கரத்த தொருகளிற்று கன்பு செய்வாம்

தனித்தனியே திசையானை தறிக ளாக
சயத்தம்பம் பலநாட்டி யொருகூ டத்தே
அனைத்துலகுங் கவித்ததென கவித்து நிற்கும்
அருட்கவிகை கலிப்பகைஞன் வாழ்க வென்றே
முருகவேள் துதி

பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்
பன்னிரண்டு மாறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம்

ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவ தொருகுடைக்கீழ கடலு திக்கும்
ஈரிரண்டு படைத்துடைய விரவிகுலோ தமனபயன் வாழ்க வென்றே
நாமகள் துதி

பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயர திருப்ப ளென்று
நாமாதுங் கலைமாது மென்ன சென்னி நாவகத்து ளிருப்பாளை நவிலு வாமே

எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போல
மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே
உமையவள் துதி

செய்யதிரு மேனியொரு பாதிகரி தாக
தெய்வமுத னாயகனை யெய்தசிலை மாரன்
கையின்மலர் பாதமலர் மீதுமணு காநங்
கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம்

கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேற
கார்முகம்வ ளைத்துதியர் கோமகன்மு டிக்க
பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
பூழியர்பி ரானபயன் வாழ்கவினி தென்றே
சத்த மாதர்கள் துதி

மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடை
சோதி மென்கொடிக ளேழி னேழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே

கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே
வாழி

விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலி னுயிர்நிலை பெறுகவே

தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி
கடை திறப்பு
உடல் அழகு

சூதள வளவெனு மிளமுலை துடியள நுண்ணிடை
காதள வளவெனு மதர்விழி கடலமு தனையவர் திறமினோ
மார்பழகு

புடைபட விளமுலை வளர்தொறும் பொறையறி வுடையரு நிலைதளர
திடைபடு வதுபட வருளுவீர் இடுகத வுயர்கடை திறமினோ
நடை அழகு

சுரிகுழ லசைவுற வசைவுற துயிலெழு மயிலென மயிலென
பரிபுர வொலியெழ வொலியெழ பனிமொழி யவர்கடை திறமினோ
ஊடிய மகளிர்

கூடிய வின்கன வதனிலே கொடைநர துங்கனொ டணைவுறா
தூடிய நெஞ்சினொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ
விடுமின் பிடிமின்

விடுமி னெங்கள்துகில் னென்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினை
பிடிமி னென்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ
கனவா நனவா

எனத டங்கவினி வளவர் துங்கனருள் எனம கிழ்ந்திரவு கனவிடை
தனத டங்கண்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ
ஊடலும் கூடலும்

முனிபவ ரொத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிருங்
கயல்க ளிரண்டுடையீர் கடைதிற மின்றிறமின்
பொ துயில்

இத்துயின் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
இதுபுல விக்குமரு தெனமனம் வைத்தடியிற்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயன
கடைதிற வாமடவீர் மின்றிறமின்
கனவில் பெற முயல்தல்

இகலி ழந்தரசர் தொழவ ரும்பவனி இரவுக தருளு கனவினிற்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ
முத்துமாலையும் பவளமாலையும்

முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேன் முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாட திறமினோ
ஆத்திமாலையின் மேல் ஆசை

தண்கொடை மானதன் மார்புதோய் தாதகி மாலையின் மேல்விழுங்
கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ
படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை

அஞ்சியே கழல்கெட கூடலிற் பொருதுசென்
றணிகடை குழையிலே விழவடர தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
மடநலீ ரிடுமணி கடைதிற திடுமினோ
கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்

அவசமுற் றுளநெக துயினெக பவளவாய்
அணிசிவ பறவிழி கடைசிவ புறநிறை
கவசமற் றிளநகை களிவர களிவருங்
கணவரை புணருவீர் கடைதிற திடுமினோ
கலவி மயக்கம்

கலவி களியின் மயக்கத்தாற் கலைபோ யகல கலைமதியின்
நிலவை துகிலென் றெடுத்துடுப்பீர் நீள்பொற் கபாட திறமினோ
நனவும் கனவும்

நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
நனவென தௌிவுறா ததனையும் பழையவ
கனவென கூறுவீர் தோழிமார் நகைமுகங்
கண்டபின் தேறுவீர் கடைதிற திடுமினோ
மகளிர் உறங்காமை

மெய்யே கொழுநர் பிழைநலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கு மடநல்லீர் புனைபொற் கபாட திறமினோ
கொழுநர் மார்பில் துயில்

போக வமளி களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாட திறமினோ
பிரிவாற்றாமை

ஆளுங் கொழுநர் வரவுபார தவர்தம் வரவு காணாமல்
தாளு மனமும் புறம்பாக சாத்துங் கபாட திறமினோ
ஒன்றில் இரண்டு

உந்தி சுழியின் முளைத்தெழுந்த உரோ பசுந்தா ளொன்றிலிரண்
டந்தி கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாட திறமினோ
சிறைப்பட்ட மகளிர் நிலை

மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடி
கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின்
மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்

அலைநாடிய புனனாடுடை யபயர்க்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற் கடைதிறமின்
தோளை தழுவி விளையாடல்

விலையி லாதவடம் முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ
கன்னட பெண்டிரின் பேச்சு

மழலைத்திரு மொழியிற்சில வடுகுஞ் சிலதமிழுங்
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின்
தழுவிய கை நழுவல்

தழுவுங் கொழுநர் பிழைநலி தழுவே லென்ன தழுவியகை
வழுவ வுடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாட திறமினோ
மகளிர் புன்னகை

வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கி
போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாட திறமினோ
உறக்கத்திலும் முகமலர்ச்சி

சொருகு கொந்தளக மொருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினு முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ
நெஞ்சம் களிப்பீர்

முலைமீது கொழுநர்கை நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத வவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின்
மதர்விழி மாதர்

கடலில் விடமென வமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலி னுயிரையு முணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ
பிறைநிலவும் முழுநிலவும்

முறுவன் மாலையொடு தரள மாலைமுக மலரின் மீதுமுலை முகிழினுஞ்
சிறுநி லாவுமதின் மிகுநி லாவுமென வருந லீர்கடைகள் திறமினோ
திருகி செருகும் குழல் மாதர்

முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரு
திருகி செருகுங் குழன்மடவீர் செம்பொற் கபாட திறமினோ
கொழுநரை நினைந்தழும் பெண்கள்

மெய்யில ணைத்துருகி பையவ கன்றவர்தா
மீள்வரெ னக்கருதி கூடல்வி ளைத்தறவே
கையில ணைத்தமணற் கண்பனி சோர்புனலிற்
கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்றிறமின்
ஊடன் மகளிர்

செருவிள நீர்பட வெம்முலை செவ்விள நீர்படு சேயரி
கருவிள நீர்பட வூடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ
நடந்துவரும் அழகு

அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்
இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ
இதழ் சுவைத்தல்

மதுர மானமொழி பதற வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ
வேதும் மருந்தும்

தங்குகண் வேல்செய்த புண்களை தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
செங்கனி வாய்மரு தூட்டுவீர் செம்பொ னெடுங்கடை திறமினோ
வேதும் கட்டும்

பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு புண்கள் தீரவிரு கொங்கையின்
கருங்கண் வேதுபட வொற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ
விழுதலும் எழுதலும்

இடையி னிலையரி திறுமிறு மெனவெழா எமது புகலிட மினியிலை யெனவிழா
அடைய மதுகர மெழுவது விழுவதாம் அளக வனிதைய ரணிகடை திறமினோ
சிலம்புகள் முறையிடல்

உபய தனமசையி லொடியு மிடைநடையை ஒழியு மொழியுமென வொண்சிலம்
பபய மபயமென வலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ
பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை

பூவிரி மதுகரம் நுகரவும் பொருகய லிருகரை புரளவுங்
காவிரி யெனவரு மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ
வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்

களப வண்டலிடு கலச கொங்கைகளின் மதியெ ழுந்துகனல் சொரியுமென்
றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ
விழி சிவக்கும் உதடு வெளுக்கும்

வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
தோ கலவி யமுதளிப்பீர் துங கபாட திறமினோ
கலவியில் நிகழ்வன

கூடு மிளம்பிறையிற் குறுவெயர் முத்துருள
கொங்கை வடம்புரள செங்கழு நீரள
காடு குலைந்தலை கைவளை பூசலிட
கலவி விடாமடவீர் கடைதிற மின்றிறமின்
காஞ்சி இரு கலிங்கம் குலைந்தது

காஞ்சி யிரு கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிரு கலிங்கங் குலைந்த களப்போர் பாட திறமினோ
கருணாகரனின் போர்ச்சிறப்பு

இலங்கை யெறிந்த கருணா கரன்றன் இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன் களப்போர் பாட திறமினோ
நினைவும் மறதியும்

பேணுங் கொழுநர் பிழைகளெலாம் பிரிந்த பொழுது நினைந்தவரை
காணும் பொழுது மறந்திருப்பீர் கனப்பொற் கபாட திறமினோ
உறவாடும் மாதர்

வாச மார்முலைகண் மார்பி லாடமது மாலை தாழ்குழலின் வண்டெழு
தூச லாடவிழி பூச லாடவுற வாடு வீர்கடைகள் திறமினோ
வாய் புதைக்கும் மடநல்லீர்

நே கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளியுரைப்ப
வாயை புதைக்கு மடநல்லீர் மணிப்பொற் கபாட திறமினோ
மதியொளிக்கு நடுங்குவீர்

பொங்கு மதிக்கே தினநடுங்கி புகுந்த வறையை நிலவறையென்
றங்கு மிருக்க பயப்படுவீர் அம்பொற் கபாட திறமினோ
தேயும் குடுமி

வருவார் கொழுந ரெனத்திறந்தும் வாரார் ரெனவடைத்து
திருகுங் குடுமி விடியளவு தேயுங் கபாட திறமினோ
புலவியும் கலவியும்

ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ ழிந்து கூடுதலி னுங்களை
தேடு வீர்கடைகள் திறமி னோவினிய தெரிவை மீர்கடைகள் திறமினோ
கண்ணின் இயல்பு

பண்படு கிளவியை யமுதென பரவிய கொழுநனை நெறிசெ
கண்கொடு கொலைசெய வருளுவீர் கனக நெடுங்கடை திறமினோ
தரையில் விரல் எழுதுவீர்

பிழைநி னைந்துருகி யணைவு றாமகிழ்நர் பிரித லஞ்சிவிடு கண்கணீர்
மழை ததும்பவிரல் தரையி லேயெழுதும் மடந லீர்கடைகள் திறமினோ
குலோத்துங்கன் போன்றீர்

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும் நடுவில் வௌிக்கே வேடனைவி
டக்கா னகத்தே யுயிர்பறிப்பீர் அம்பொற் கபாட திறமினோ
பூவும் உயிரும் செருகுவீர்

செக்க சிவந்த கழுநீருஞ் செகத்தி லிளைஞ ராருயிரும்
ஒக்க செருகுங் குழன்மடவீர் உம்பொற் கபாட திறமினோ
காடு பாடுவோம்

களப்போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம்
மரம் செடி கொடிகள்

பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே

உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே

வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே
பரிதியின் செயல்

தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே
நிழல் இல்லாமை

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவி
டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே
நிழலின் செயல்

ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனத
பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே
நெருப்பும் புகையும்

செந்நெ ருப்பினை தகடு செய்துபார் செய்த தொக்கு செந்த ரைப்பர
பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொ பல்ல தொப்புறா வதனி டைப்புறா
நிலத்தில் நீரின்மை

தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெ
நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே
நிலத்தின் வெம்மை

இந்நி லத்துளோ ரேக லாவதற் கௌிய தானமோ வரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறி தல்ல வோநில தடியி டாததே
இரவியும் இருபொழுதும்

இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்ப கேண்மின்
ஒருபொழுது தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ
பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே

காடிதனை கடத்துமென கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
ஓடியிளை துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ
தேவர் வாழ்க்கை

விம்முகடு விசைவனத்தின் வெம்மையினை குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
மைம்முகடு முகிற்றிரையி டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ
பேயின் மூச்சும் மரத்தின் புகையும்

நிலம்புடைபேர தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால்
வறண்ட நாக்கும் முதிய பேயும்

வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே
சூறாவளியின் இயல்பு

விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர
சுழிசுழல வருவதென சூறைவளி சுழன்றிடுமால்
நீறு பூத்த நெருப்பு

சிதைந்தவுடற் சுடுசுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறியவ பொடியாற் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே
முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்

மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
கண்ணோடி சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
கண்டிரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும்
முத்துக்கள் கொப்புளங்கள்

வெடித்தகழை விசைதெறிப்ப தரைமேன் முத்தம்
வீழ்ந்தனவ தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
பொடித்தவியர புள்ளிகளே போலும்
போலாவேற் கொப்புளங்கள் போலும்
காற்றின் தன்மை

பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
பாய்கடல்கள் நூக்குமத படர்வெங் கானில்
செல்காற்று வாராமல் காக்க வன்றோ
திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ
வெந்தவனமே இந்தவனம்

முள்ளாறுங் கல்லாறு தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும்
மணலின் தன்மை

அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலு கப்பாலை
மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே
கோயில் பாடியது
பழையகோயிலும் புதியகோயிலும்

ஓதி வந்தவ கொடிய கானக துறைய ணங்கினு கயன்வ குத்தவி
பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம்
புதிய கோயிலுக்கு கடைக்கால்

வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை
பட்ட மன்னர்தம் மங்கையர் பரும ணிக்கரு திருவி ருத்தியே
கோயில் இயல்பு

துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முக துருவி நேரெதிர
தவர்நி ணத்தொட குருதி நீர்குழை தவர்க ருந்தலை சுவர டுக்கியே
தூணும் உத்தரமும்

அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டல தரண றப்பறி
தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு திரமி யற்றியே
கை மரமும் பரப்பு

கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினை திரள் துலாமெனும்
படிப ரப்பி பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே
மேல் முகடு

மீளி மாவுகை தபயன் முன்னொர்நாள் விருத ராசரை பொருது கொண்டபோர்
ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே
வெற்றிடத்தை மூடுதல்

துங்க பத்திரை செங்க ளத்திடை சோள சேகரன் வாளெ றிந்தபோர்
வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வௌிய டங்கவே மிசைக விக்கவே
கோபுரமும் நெடுமதிலும்

கொள்ளிவா பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்
வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே
கோயில் வாயிலில் மகரதோரணம்

காரிரும்பின் மகரதோ ரணமா கரும்பேய்கள்
ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே
மதில்களின் காட்சி

மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுக தாமரையு மருங்கு சூழ்ந்த
எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவி பசுந்தலையு மெங்கு தூக்கி
மதுரையின் மகரதோரணம்

பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவு தூக்கி
மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி
ஈம விளக்கு

பரிவிருத்தி யலகிட்டு பசுங்குருதி நீர்தௌித்து நிணப்பூ சிந்தி
எரிவிரித்த ஈமவிள கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ
வீரர்களின் பேரொலி

சலியாத தனியாண்மை தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்கு தக்க தாக
பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ
வீர வழிபாடு

சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப
தலை துதிக்கும் முண்டம் வழிபடும்

அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கை கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையை பரவு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ
அச்சுறுத்தும் தலைகள்

நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த
நெடுங்குஞ்சி சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலு சிரமச்ச முறுத்து மாலோ
அஞ்சி அலைந்தன

கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ
தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே
உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்
உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே
குரல் ஒலியும் வாத்திய

பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ
பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்
முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே
மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே
மெ காப்பாளர்கள்

தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே
யோகினி பெண்கள்

படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்
இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே
பெருந்தலை கண்டு பேய் உறங்காமை

வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறு திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்க சூர்ப்பேய்
காலன் இடும் தூண்டில்

அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதி புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்ன தோன்றும்
கொள்ளிவா பேயின் தன்மை

கொல்வா யோரி முழவா கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வா செய்ய தசைதேடி நரிவா தசையை பறிக்குமால்
கோயிலை சுற்றியுள்ள சுடலை

நிணமு தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று
பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ
தேவியை பாடியது
காளியின் வடிவழகு

உவையுவை யுளவென் றெண்ணி உரைப்ப தெனுரைக்க வந்த
அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்
பரிபுரம் விளங்கும் பாதம்

ஒருமலை மத்துவல துலவுக யிற்றினுமற்
றுலகுப ரித்தபண துரகவ டத்தினு
பருமணி முத்துநிரை துடுமணி தைத்தவிணை
பரிபுரம் வைத்ததளிர பதயுக ளத்தினளே
காளி தேவியின் குங்குமப்பொட்டு

அருமறை யொத்தகுல தருணெறி யொத்தகுண
தபயனு தித்தகுல துபயகு லத்துமுதல்
திருமதி யொக்குமென தினகர னொக்குமென
திகழ்வத னத்தினிடை திலகவ னப்பினளே
சதிகொள் நடனம்

அரவொடு திக்க பொழுதுப ரித்தவிட
தடியிட வுட்குழிவுற் றசைவுறு மப்பொழுதில்
தரணித ரித்ததென பரணிப ரித்தபுகழ
சயதர னைப்பரவி சதிகொள் நடத்தினளே
பால் நிரம்பிய கிண்ணம்

தணிதவ ளப்பிறையை சடைமிசை வைத்தவிடை
தலைவர்வ னத்தினிடை தனிநுகர் தற்குநினை
தணிதவ ளப்பொடியி டடையவி லச்சினையி
டமுதமி ருத்தியசெ பனையத னத்தினளே
ஆடையும் இடைக்கச்சும்

பரிவக லத்தழுவி புணர்கல விக்குருகி
படர்சடை முக்கணுடை பரமர்கொ டுத்தகளிற்
றுரிமிசை அக்கரியிற் குடரொடு கட்செவியி
டொருபுரி யிட்டிறுக புனையுமு டுக்கையளே
தேவியின் பிள்ளைகள்

கலைவள ருத்தமனை கருமுகி லொப்பவனை
கரடத டக்கடவு கனகநி றத்தவனை
சிலைவளை வுற்றவுண தொகைசெக விட்டபரி
திறலவ னைத்தரு திருவுத ரத்தினளே
தேவியின் அணிகள்

கவளம தக்கரட கரியுரி வைக்கயிலை
களிறுவி ருப்புறு கனகமு லைத்தரள
தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரி
தழலுமி ழுத்தரி தனியுர கத்தினளே
காளியின் கைகள்

அரியுமி டற்றலையி டலைகுரு திக்கெதிர்வை
தறவும டுத்தசிவ பதனைமு ழுத்திசையிற்
கரிகர டத்தொளையிற் கலுழியி டைக்கழுவி
கருமைப டைத்தசுடர கரகம தினளே
தேவியின் உதடுகள்

சிமையவ ரைக்கனக திரளுரு கப்பரவை
திரைசுவ றிப்புகை திசைசுடு மப்பொழு
திமையவ ரைத்தகைதற் கிருளுமி டற்றிறைவற்
கினியத ரத்தமுத கனியத ரத்தினளே
சிவனின் பகை தீர்த்தவள்

உருகுத லுற்றுலக துவமைய றச்சுழல்வுற்
றுலவுவி ழிக்கடைப டுடல்பகை யற்றொழி
திருகுதலை கிளவி சிறுகுத லைப்பவள
சிறுமுறு வற்றரள திருவத னத்தினளே
காதணிகளும் மாலைகளும்

அண்டமுறு குலகிரிகள் அவளொருகா லிருகாதிற்
கொண்டணியிற் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம்
தேவியின் ஆற்றல்

கைம்மலர்மே லம்மனையாம் கந்துகமாங் கழங்குமாம்
அம்மலைக ளவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ
பேய்களை பாடியது
காளியின் பெருமை

எவ்வணங்கு மடிவணங்க இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை யகலாத அலகைகளை யினிப்பகர்வாம்
பேய்களின் காலும் கையும்

பெருநெ டும்பசி பெய்கல மாவன பிற்றை நாளின்முன் னாளின்மெ லிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங் காலுங் கையுமு டையன போல்வன
வாய் வயிறு முழங்கால்கள்

வன்பி லத்தொடு வாதுசெய் வாயின வாயி னானிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல மும்மு ழம்படு மம்முழ தாளின
பேய்களின் உடம்பு

வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல் வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழில மெங்களை கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன
கன்னங்களும் விழிகளும்

உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே ஒட்டி யொட்டுவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகிற் குன்று தோன்றுவ போலவி ழிப்பன
முதுகும் கொப்பூழும்

வற்ற லாகவு லர்ந்தமு துகுகள் மரக்க லத்தின்ம றிபுற மொப்பன
ஒற்றை வான்றொளை புற்றென பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடு முந்திய
உடல் மயிர் மூக்கு காது

பாந்தள் நால்வன போலுமு டல்மயிர் பாசி பட்டப ழந்தொளை மூக்கின
ஆந்தை பாந்தி யிருப்ப துரிஞ்சில்பு கங்கு மிங்குமு லாவு செவியின
பல் தாலி தலை உதடு

கொட்டும் மேழியுங் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்தணி தாலிய
தட்டி வானை தகர்க்கு தலையின தாழ்ந்து மார்பிடை தட்டு முதட்டின
தாய்ப்பேயும் பிள்ளைப்பேயும்

அட்ட மிட்ட நெடுங்கழை காணிலென் அன்னை யன்னையென் றாலுங் குழவிய
ஒட்ட ஒட்டகங் காணிலென் பிள்ளையை ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன
ஆற்றாத பசி

புயல ளிப்பன மேலும ளித்திடும் பொற்க தப யன்புலி பின்செல
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங் காந்து வெம்பசி யிற்புற தீந்தவும்
காளியை பிரியாத பேய்கள்

துஞ்ச லுக்கணி தாமென முன்னமே சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
அஞ்ச லித்தொரு காலக லாமலவ் வணங்கி னுக்கரு காகவி ருக்கவே
நொண்டி பேய்

ஆளை சீறுக ளிற்றப யன்பொரூஉம் அக்க ளத்தில ரசர்சி ரஞ்சொரி
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழிபெ யர்ந்தொரு கால்முட மானவும்
கை ஒடிந்த பேய்

அந்த நாளக்க ளத்தடு கூழினு காய்ந்த வெண்பல் லரிசி யுரற்புக
உந்து போதினிற் போத கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும்
குருட்டு பேய்

விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் வென்ற சக்கர கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கல தட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்
ஊமை பேய்

வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா மதுரை வெங்கள தேமது ரிக்கவ
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபு குள்வி ழுந்தற ஊமைகள் ஆனவும்
செவிட்டு பேய்

ஆனை சாயவ டுபரி யொன்றுகை தைம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் றார்த்திடு மார்ப்பினில் திமிரி வெங்கள திற்செவி டானவும்
குட்டை பேய்

பண்டு தென்னவர் சாயவ தற்குமுன் பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
கொண்டு வந்தபேய் கூடிய போதில குமரி மாதர்பெ றக்குற ளானவும்
கூன் பேய்

பரக்கு மோதக்க டாரம ழித்தநாள் பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியுங்
குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற் குடிய டங்கலுங் கூன்முது கானவும்
கடல் விளையாட்டு

சிங்க ளத்தொடு தென்மது ராபுரி செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தில டுமடை பேய்க்குலம் வேலை புக்குவி ரல்கள் திறந்தவும்
இந்திர சாலம்
தீபக்கால் கட்டில்

இவ்வண்ண திருதிறமு தொழுதிருப்ப எலும்பின்மிசை குடர்மென் கச்சிற்
செவ்வண்ண குருதிதோய் சிறுபூ தீபக்கால் கட்டி லிட்டே
பிண மெத்தை

பிணமெத்தை யஞ்சடுக்கி பேயணையை முறித்திட்டு தூய வெள்ளை
நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும் பஞ்சசய னத்தின் மேலே
கொலு வீற்றிருத்தல்

கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் இடும்பிண்டி பால மேந்தி
இடாகினிக ளிருமருங்கு மீச்சோப்பி பணிமாற விருந்த போழ்தின்
கோயில் நாயகியை கும்பிடுதல்

அடல்நாக எலும்பெடுத்து நரம்பிற் கட்டி அடிக்கடியும் பிடித்தமரின் மடிந்த வீரர்
குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பி டாங்கே
காளியிடம் நெடும்பேய் கூறல்

சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் துணித்துவைத்த சிரமன்று தின்ற பேயை
சிரமரிய வதற்குறவா யொளித்து போந்த சிலபேயை திருவுள்ள தறிதி யன்றே
முதுபேயின் வருகை கூறல்

அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங் கடியேனை விண்ணப்பஞ் செய்க வென்ற
திப்பேயிங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ள மென்ன கேட்டே
முதுபேய் மன்னிப்பு கேட்டல்

அழைக்க வென்றலும ழைக்க வந்தணுகி அஞ்சி யஞ்சியுன தாணையிற்
பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே
காளியின் அருள்மொழி

அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை யறுத்த வன்தலைய வன்பெற
பொருத்தி யப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே
முதுபேய் வேண்டல்

உய்ந்து போயினமு வந்தெ மக்கருள ஒன்றொ டொப்பனவொ ராயிரம்
இந்த்ர சாலமுள கற்று வந்தனெ னிருந்து காணென விறைஞ்சியே
கண் கட்டு வித்தைகள்

ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கைபார்
மாறி இக்கையில ழைக்க மற்றவை மதக்க ரித்தலைக ளானபார்

இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துரு மிடித்தென
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம் மிதப்பபார்

அடக்க மன்றிது கிடக்க வெம்முடைய அம்மை வாழ்கவென வெம்மைபார்
கடக்க மென்றபயன் வென்றி வென்றிகொள் கள பெரும்பரணி யின்றுபார்

துஞ்சி வீழ்துரக ராசி பாருடல் துணிந்து வீழ்குறை துடிப்பபார்
அஞ்சி யோடும்மத யானை பாருதிர ஆறு மோடுவன நூறுபார்

அற்ற தோளிவை யலைப்ப பாருவை யறாத நீள்குடர் மிதப்பபார்
இற்ற தாள்நரி யிழுப்ப பாரடி யிழுக்கும் மூளையில் வழுக்கல்பார்

நிணங்கள் பார்நிண மணங் கனிந்தன நிலங்கள் பார்நில மடங்கலும்
பிணங்கள் பாரிவை கிடக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார்
வித்தை கண்ட பேய்களின் மயக்கம்

என்ற போதிலிவை மெய்யெ னாவுட னிருந்த பேய்பதறி யொன்றன்மேல்
ஒன்று கால்முறிய மேல்வி ழுந்தடிசில் உண்ண வெண்ணிவெறும் மண்ணின்மேல்

விழுந்துகொ ழுங்குரு திப்புன லென்றுவெ றுங்கைமு கந்துமுக
தெழுந்து விழுந்தசை யென்று நிலத்தை யிருந்து துழாவிடுமே

சுற்ற நிணத்துகில் பெற்றன மென்றுசு லாவுவெ றுங்கையவே
அற்ற குறைத்தலை யென்று விசும்பை யதுக்கு மெயிற்றினவே

கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்கவிரை
தெயிற்றை யதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல்விழவே

முறம்பல போல நகங்கள் முறிந்து முகஞ்சித றாமுதுகு
திறம்பலி லாவிறல் யோகினி மாதர் சிரித்துவி லாவிறவே
பேய்கள் வேண்டுதல்

அக்கண மாளு மணங்கினை வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கண மாளுமி னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே
முதுபேயின் வேண்டுகோள்

கொற்றவர்கோன் வாளபய னறிய வாழுங்
குவலயத்தோர் கலையனைத்துங் கூற வாங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
கடைபோ கண்டருளென் கல்வி யென்றே
தாயின்மேல் ஆணை

வணங்குதலுங் கணங்களெலா மா பாவி
மறித்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
அணங்கரசி னாணையென அணங்கு மிப்போ
தவைதவிரெங் கிவைகற்றா யென்ன வாங்கே
முதுபேய் வரலாறு

நின்முனிவுஞ் சுரகுருவின் முனிவு மஞ்சி
நிலையரிதென் றிமகிரிபு கிருந்தேற் கௌவை
தன்முனிவு மவன்முனிவு தவிர்க வென்று
சாதன திரவிச்சை பலவு தந்தே

உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
உருத்திரயோ கினியென்பா ளுனக்கு நன்மை
இன்னுமுள கிடைப்பனவிங் கிருக்க வென்ன
யானிருந்தேன் சிலகால மிருந்த நாளில்
இராச பாரம்பரியம்
இமயத்தில் புலிக்கொடி

செண்டு கொண்டுகரி காலனொரு காலி னி
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனை
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே
நாரதர் கூறல்

கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்
கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
போலு மன்னருள ரல்லரென ஆசி புகலா
புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான்
விநாயகர் பாரதம் எழுதினார்

பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்
பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகை
கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதி
குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால்

பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்
பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி
நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே
இதுவும் வேதம் ஆகும்

அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்
பாத மானசில பார்புகழ வந்த அவையும்

அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே
ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்
வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்
வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே

கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்
காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
அமல வேதமிது காணுமிதி லார ணநில
தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே
நாரதர் இருப்பிடம் செல்லல்

அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்
அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்
தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்
தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே
நாரதர் கூறிய வரலாறு

ஆதி மாலமல நாபிகம லத்த யனுதி
தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்
காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்
காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும்

அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புர
தரிய காதலனை யாவினது கன்று நிகரென்
றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்
இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும்

இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்
இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்
சக்கு வாயிர முடைக்களிறு வாகன மென
தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும்

ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே
உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்
புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும்

கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்
உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்
ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும்

சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்
இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும்

கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்
காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும்

புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்
புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்
வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்
வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும்

தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணி
சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும்

தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே
தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்
களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வ ழி தளையை வெட்டியர சிட்ட அவனும்
கரிகால் வளவன்

என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடி
தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்
தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும்

தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்பட
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும்

தத்து நீர்வரால் குருமி வென்றது
தழுவு செந்தமிழ பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெற
பண்டு பட்டின பாலை கொண்டதும்

ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா
உதியர் மன்னரே மதுரை மன்னரென்
றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவி
தெரிவி ளக்குவை திகல்வி ளைத்ததும்
முதலாம் பராந்தகன்

வேழ மொன்றுகை தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்
ஈழ முந்தமிழ கூடலுஞ் சிதை திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும்
முதலாம் இராசராச சோழன்

சதய நாள்விழா உதியர் மண்டல தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்
உதய பானுவொ துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும்
முதலாம் இராசேந்திர சோழன்

களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரை குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்
முதலாம் இராசாதிராசன்

கம்பி லிச்ச தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டற
கிம்பு ரிப்பணை கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும்
இராசேந்திர சோழன்

ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொ துலகு யக்கொள பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும்
இராச மகேந்திரன்

பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
பண்டுரைத்த நெறிபுதுக்கி பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்
முதற் குலோத்துங்கன் தோற்றம்

குந்தளரை கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்கா தளித்த பின்னை
இந்தநில குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்ன தோன்றி
வெற்றி சிறப்பு

எவ்வளவு திரிபுவன முளவா தோன்றும் குலமறைக ளுளவாய் நிற்கும்
அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்கா தளிக்கு மாறும்
கரிகாலன் எழுதி முடித்தான்

இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகல
தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே
காளி வியத்தல்

எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனை
தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்
சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ
காளி மகிழ்தல்

வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே
ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொ திருந்த தில்லை
காளி புகழ்தல்

உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகை சயதுங்கன் மரபு கீர்த்தி
அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன
பேய் முறைப்பாடு
பேய்களாக பிறந்து கெட்டோம்

ஆறுடைய திருமுடியா னருளுடைய பெருந்தேவி யபயன் காக்கும்
பேறுடைய பூதமா பிறவாமற் பேய்களா பிறந்து கெட்டேம்
எங்களை யார் காப்பார்

ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளி காப்பதல்லா லடை பாழாம்
ஊர்காக்க மதில்வேண்டா வுயிர்காத்த உடம்பினைவி டோடி போதும்
பிழைக்க மாட்டோம்

ஓய்கின்றே மோய்வுக்கு மினியாற்றேம் ஒருநாளை கொருநாள் நாங்கள்
தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேஞ் செற்றாலு முய்ய மாட்டேம்
ஆசை போதும்

வேகைக்கு விறகானே மெலியா நின்றே மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகுங் காணேஞ்
சாகைக்கி தனையாசை போதும் பாழிற் சாக்காடு மரிதாக தந்து வைத்தாய்
பசிக்கு ஒன்றும் இல்லேம்

சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் கீழ்நாங்கண் மேனா செய்த
பாவத்தா லெம்வயிற்றிற் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம்
மூளி வாய் ஆனோம்

பதடிகளா காற்றடிப்ப நிலைநி லாமற் பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோட பாராய்
நெற்றாகி யுள்ளோம்

அகளங்க னமக்கிரங்கா னரசரிடு திறைக்கருள்வா னவன்றன் யானை
நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றா யற்றேம்
நற்குறியால் பொறுத்துள்ளோம்

மூக்கருகே வழுநாறி முடைநாறி உதடுகளு துடிப்ப வாயை
ஈக்கதுவுங் குறியாலு திருக்கின்றேம் அன்றாகி லின்றே சாதும்
முதுபேய் வருகை

என்றுபல கூளிகளி ரைத்துரைசெய் போ
தன்றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய்
முதுபேய் வணங்கி கூறல்

கைதொழுதி றைஞ்சியடி யேன்வடக லிங்க
தெய்தியவி டத்துளநி மித்தமிவை கேண்மோ
தீய சகுனங்கள்

மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ

வார்முரசி ருந்துவறி தேயதிரு மாலோ
வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மனையி லூமனெழ ஓரியழு மாலோ
ஓமஎரி ஈமஎரி போல்கமழு மாலோ

பூவிரியு மாலைகள் புலால்கமழு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ
விளைவு என்ன ஆகும்

எனாவுரைமு டித்ததனை யென்கொல்விளை வென்றே
வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே
இரு குறிகள் நல்லன

உங்கள் குறியும் வடகலிங்க துள்ள குறியு முமக்கழகே
நங்கள் கணித பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம்
பரணி போர் உண்டு

நிருபரணி வென்றவக ளங்கன்மத யானைநிக ளங்களொடு நிற்பன வதற்
கொருபரணி உண்டென வுரைத்தன வுரைப்படி யுமக்கிது கிடைக்கு மெனவே
களிப்பால் நடித்தன

தடித்தன மெனத்தலை மெனப்பல தனிப்பனை குனிப்ப வெனவே
நடித்தன நடிப்பவலி யற்றன கொடிற்றையு நனைத்தன உதட்டி னுடனே
பசியை மறந்தன

விலக்குக விளைத்தன வெனக்களி
அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே
வயிறு நிர போதுமா

ஆடியிரை தெழுகணங்க ளணங்கேயி கலிங்கக்கூழ்
கூடியிரை துண்டொழியெங் கூடார போதுமோ
ஒட்டிக்கு இரட்டி

போதும்போ தாதெனவே புடைப்படல மிடவேண்டா
ஓதஞ்சூ ழிலங்கைப்போர கொட்டிரட்டி கலிங்க போர்
அவதாரம்
திருமாலே தோன்றினான்

அன்றிலங்கை பொருதழித்த வவனே பாரதப்போர் முடித்து பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்ப கேண்மின்

தேவரெலாங் குறையிரப்ப தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகு தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை
கண்ணனே குலோத்துங்கனானான்

இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுல திராச ராசன்
அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள
துந்துமி முழங்கிற்று

வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரநீங் கினவென்ன வந்தரது துமிமுழங்கி யெழுந்த தாங்கே
மலர்க்கையால் எடுத்தாள்

அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி
குலமகள்தன் குலமகனை கோகனத மலர்க்கையா னெடுத்து கொண்டே
பாட்டியார் கருத்து

அவனிபர்க்கு புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்க தகுவ னென்றே
இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்

திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
செய்யபரி திக்குழவி யையனிவ னென்று
தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமு
தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே
நடை கற்றான்

சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே
திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே
அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே
அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே
ஐம்படை தாலி அணிந்தனன்

பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
படர்களையு மாயனிவ னென்றுதௌி வெ
தண்டுதனு வாள்பணில நேமியெனு நா
தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே
மழலை மொழிந்தான்

தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே
தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கி
சொற்கள்தெரி யத்தனது வித்தே
பூணூல் அணிந்தான்

திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்
பெருமார்பின் வந்தொளிர பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர்
மறை கற்றான்

போதங்கொள் மாணுருவா புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே
வீர வாள் ஏந்தினான்

நிறைவாழ்வை பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந
துறைவாளை புயத்திருத்தி யுடைவாளை திருவரையி னொளிர வைத்தே
யானையேற்றம் கற்றான்

ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே
குதிரையேற்றம் பயின்றான்

இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்
ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாக துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே
படைக்கலம் பயின்றான்

சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்கு
திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றி செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே
பல்கலை தேர்ந்தான்

உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலக
தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே
இளவரசன் ஆனான்

இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே
திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே
போர்மேல் சென்றான்

வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை
வளையுகிர்ம டுத்து விளையா
டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக
ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே
வடவரசரை வென்றான்

குடதிசை புகக்கடவு குரகதர
தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்
வடதிசை முகத்தரசர் வருகத
முகத்தனது குரகத முகை தருளியே
வயிராகரத்தை எறித்தான்

புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா
கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனை கடவியே
களம் கொண்டான்

குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரை
தளமுதிர வெட்டியொரு செருமுதிர
ஒட்டினர்கள் தலைமலை குவி தருளியே
சக்கரக்கோட்டம் அழித்தான்

மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவ
தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுச கரக்கோட்டம்
சீதனம் பெற்றான்

சரிக ளந்தொறு தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கை பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர்
கைவேல் சிவந்தது

பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன
விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே
வீரராசேந்திரன் இறந்தான்

மாவுகை தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவரு கரசனாய் விசும்பின் மேற்செல தென்றிசை குப்புகு தன்மை செப்புவாம்
சோழ நாட்டில் நிகழ்ந்தவை

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறி
துறைகளோ ராறு மாறி சுருதியு முழக்கம் ஓய்ந்தே

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே

ஒருவரை யொருவர் கைம்மி கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே
சோழநாடு அடைந்தான்

கலியிருள் பரந்த காலை கரக்க தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி
நீதியை நிலைநிறுத்தினான்

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனா கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே
திரு முழுக்கு

விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்ப
திரிபுவ னங்கள் வாழ திருவபி டேகஞ் செய்தே
முடி புனைதல்

அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட
மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே
அறம் முளைத்தன

நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி
சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே
புலிக்கொடி எடுத்தான்

பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்
அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே
நிலவு எறித்தது இருள் ஒளித்தது

குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி
கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே
குடை நிழலின் செயல்

அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்
ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில்
புகழ் மேம்பாடு

அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில்

நிழலில டைந்தன திசைகள் நெறியில மறைகள்
கழலில டைந்தனர் உதியர் கடலில செழியர்

கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே

பரிசில் சுமந்தன கவிகள் பகடு திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி புயமும்

விரித்த வாளுகிர் விழி தழற்புலியை மீது வைக்கவிம யத்தினை
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய வில்லையே

கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்
பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு ளிற்றளைக ளில்லையே

மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க தில்லையே
பொழுது போக்கு

வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாத போரும்
இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா மினைய கண்டே

கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்
முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி
பரிவேட்டையாட நினைத்தான்

காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடி
பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயண மென்றே
படை திரண்டது

முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகரு புகுந்த தொப்ப
திரைசெய்கட லொலியடங்க திசைநான்கிற் படைநான்கு திரண்ட வாங்கே
வேட்டைக்கு புறப்பட்டான்

அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளி கணித நூலிற்
பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநா பழுதற்ற பொழு தாங்கே
தானம் அளித்தான்

அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே
அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே
கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே
கரட தானமத வாரணமு மன்று பெறவே
யானைமேல் ஏறினான்

மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்
மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே
கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரி
குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே
பல்லியம் முழங்கின

ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே
பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே
வேறு பல ஒலிகள் எழுந்தன

மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்
இன