------------------------------------------------------------------------

      -8
      திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய
      சிவஞானபோதம்
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      - .

      .
      .
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      4.6 5
      -8 - .
      .

      © 1999-2000


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------

      திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்

      சிறப்பு பாயிரம் மங்கல வாழ்த்து அவையடக்கம்
      பொதுவதிகாரம் பிரமாணவியல்
      முதல் சூத்திரம்
      இரண்டாம் சூத்திரம்
      மூன்றாம் சூத்திரம்
      பொதுவதிகாரம் இலக்கணவியல்
      நாங்காம் சூத்திரம்
      ஐந்தாம் சூத்திரம்
      ஆறாம் சூத்திரம்
      உண்மை அதிகாரம் சாதனவியல்
      ஏழாம் சூத்திரம்
      எட்டாம் சூத்திரம்
      ஒன்பதாம் சூத்திரம்
      உண்மை அதிகாரம் பயனியல்
      பத்தாம் சூத்திரம்
      பதினொறாம் சூத்திரம்
      பனிரண்டாம் சூத்திரம்
      ------------------------------------------------------------------------
      திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்
      சிறப்பு பாயிரம்
      நேரிசை ஆசிரியப்பா
      மலர்தலை உலகின் மாயிருள் துமி
      பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதை
      காண்டல் செல்லா கண்போல் ஈண்டிய
      பெரும்பெயர கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
      அருந்துயர குரம்பையின் ஆன்மா நாடி
      மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
      உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
      பெண்ணை புனல்சூழ் வெண்ணெ சுவேதவனன்
      பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
      பவநனி வன்பகை கடந்த
      தவரடி புனைந்த தலைமை யோனே.
      நூல்
      மங்கல வாழ்த்து
      கல்லால் நிழன்மலை
      வில்லார் அருளிய
      பொல்லார் இணைமலர்
      நல்லார் புணைவரே
      அவையடக்கம்
      தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
      எம்மை உடைமை எமை இகழார்--- தம்மை
      உணரார் உடங்குஇயைந்து தம்மில்
      புணராமை கேளாம் புறன்
      பொதுவதிகாரம்பிரமாணவியல்
      1. பொதுவதிகாரம்
      1.பிரமாணவியல்
      முதல் சூத்திரம்
      அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
      தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து
      இவ்வுலகம் என்பது உணர்த்துதல்
      நுதலிற்று.
      உரைவகை இதன் பொழிப்பு உரைத்து கொள்க.
      1. முதல் அதிகரணம்
      மேற்கோள்
      ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம்
      உடைத்து என்றது.
      ஏது தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்
      உதாரணம்
      பூதாதி ஈறும் முதலும் துணையாக
      பேதாய் திதி ஆகும் பெற்றிமையின்- ஓதாரோ
      ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும்
      அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1
      2. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது
      ஏது இல்லதற்கு தோற்றம் இன்மையின் உள்ளதற்கு செய்வோர் இன்றி செய்வினை இன்மையின்.
      உதாரணம்.
      இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால்
      இலயித்தவாறு உளதா வேண்டும் இலயித்தது
      அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது
      அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2
      வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம்
      அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால்- வித்தகமாம்
      வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவை தான் கொடுத்து
      கூட்டானே மண்போல் குளிர்ந்து 3
      நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
      தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் -- ஆக்காதே
      கண்ட நனவு உணர்விற் கனவு உணர
      கண்டவனின் இற்று இன்றாம் கட்டு 4
      3. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி சங்காரமே முதல் என்றது.
      ஏது சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது
      சுதந்திரமின்றி நிற்றலான்.
      உதாரணம்
      ஒன்று அலா ஒன்றில் உளது ஆகி நின்றவாறு
      ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் -- ஒன்றலா
      ஈறே முதல் அதனின் ஈறு அலா ஒன்று பல
      வாறே தொழும்பு ஆகும் அங்கு 5
      இரண்டாம் சூத்திரம்
      அவையே தானே ஆய் இரு வினையிற்
      போக்கு வரவு புரிய ஆணையின்
      நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோவெனின் புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
      4. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது.
      ஏது அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில் என்று சுட்டுவது உண்மையின்
      என்ற சொல்லே அந்நிய
      நாத்தியை உணர்த்துமாயிட்டு.
      உதாரணம்.
      கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம்
      இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி
      அவன் உளம் ஆகில்லான் ஆ
      அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. 6
      ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
      ஒன்று என்ற நீ பாசத்தோடு உளை காண்--- இன்றால்
      அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்
      இக்கிரமத்து என்னும் இருக்கு. 7
      பண்ணையும் ஓசையும் போல பழமதுவும்
      எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
      அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
      அத்துவிதம் என்று அறையும் ஆங்கு 8
      அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல்
      உருக்கி உடங்கு இயைந்து நின்று--- பிரிப்பு இன்றி
      தாமே உலகாம் தமியேன் உளம் புகுதல்
      யானே உலகு என்பன்இன்று 9
      5. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது
      ஏது ஒரு நகரியை காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான்
      உதாரணம்
      உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
      உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே--- வள்ளலவன்
      செய்பவர் செய்தி பயன் விளைக்குஞ் செய்யேபோல்
      செய்வன் செயல் அணையா சென்று. 10
      அவ்வினையை செய்வதனில் அவ்வினைஞர் தாம் சென்றங்கு
      அவ்வினையை காந்த பசாசம் போல்- அவ்வினையை
      பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
      ஆர்தான் அறிந்து அணைப்பார் ஆங்கு. 11
      நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும்
      சொல்லில் புதிதன்று தொன்மையே -- வல்லி
      மலகன்மம் அன்று உளவாம் வள்ளலால் பொன்வாள்
      அலர்சோகம் செய் கமலத்து ஆம். 12
      6. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள்இனி இவ்வான்மாக்கள் மாறி பிறந்து வரும் என்றது.
      ஏது தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.
      உதாரணம்
      கண்ட நனவை கனவு உணர்வில் தான் மறந்து
      விண்படர்ந்து அத்தூடு வினையினால் -- கண்செவிகெட்டு
      உள்ளதே தோற்ற உளம் அணுவா சென்றுமனம்
      தள்ள விழும் கருவில் தான். 13
      அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் வேறு
      பரகாயம் போய்வரும் அப்பண்பும் -- பரவில்
      குடாகாய ஆகா கூத்தாட்டம் என்பது
      அடாது உள்ளம் போமாறு அது 14
      7. நாங்காம் அதிகரணம்
      மேற்கோள் இனி நீக்கமின்றி நிற்குமன்றே என்றது
      ஏதுஅவன் ஏகன் அநேகன் இரண்டும் இன்றி சருவவியாபியாய் நிற்றலான்.
      உதாரணம்
      எங்குமுளன் என்ற அளவை ஒன்று அன்று இரண்டென்னில்
      எங்கும் உளன் அன்று எவற்று எவனும்--- அங்கண்
      அவை அவன் அன்றில்லை பொன்னொளிப்பொல் ஈசன்
      அவையுடமை ஆளாம் நாம் அங்கு. 15
      மூன்றாம் சூத்திரம்.
      உளதுஇலது என்றலின் எனதுடல்
      ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
      உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
      மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ வெனின் ஆன பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.
      8. முதல் அதிகரணம்.
      மேற்கோளும் ஏதுவும் ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது என்றது.
      பொழிப்புரை எவற்றினையும் அன்று எனவிட்டு ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின்
      அதுவே அவ் வான்மாவாம்
      என்றது.
      உதாரணம்
      அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
      நின்றஒன்று உளதுஅதுவே நீ அனைத்தும்-- நின்றுஇன்று
      தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
      தற்பரமும் அல்லை தனி. 16
      9. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது
      பொழிப்புரை என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ்
      வான்மாவாம் என்றது.
      உதாரணம்
      எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது
      உனதலாது உன்கைகால் யாக்கை -- எனதென்றும்
      என்னறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண்
      உன்னில் அவை வேறாம் உணர். 17
      10. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது
      பொழிப்புரை ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்து
      ஒன்று அறியாமையின் இவ்
      ஐந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின் அதுவே அவ் ஆன்மாவாம் என்றது.
      உதாரணம்
      ஒன்று அறிந்தது அறியா தாகி உடல்மன்னி
      அன்றும் புலனாய அவ் அஞ்செழுத்தை-- ஒன்று அறிதல்
      உள்ளதே ஆகில் அதுநீ தனித்தனி கண்டு
      உள்ளல் அவை ஒன்றல்ல ஓர். 18
      11. நான்காம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது.
      பொழிப்புரை நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே
      அவ்வான்மாவாம் என்றது.
      உதாரணம்
      அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்ப
      செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி-- அவ்வுடலின்
      வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
      மாறல் உடல் நீ அல்லை மற்று 19
      12. ஐந்தாம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்றது.
      பொழிப்புரை ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின்
      ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியா
      நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
      உதாரணம்
      கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங காணாதே
      உண்டிவினை இன்றி உயிர்த்தலால்-- கண்டறியும்
      உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில்
      உள்ளதாம் உண்டிவினை ஊன். 20
      13. ஆறாம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.
      பொழிப்புரை அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது
      உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம்
      என்றது.
      உதாரணம்.
      அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது
      அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி-- அறிந்தது
      எது அறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்
      அதுஅதுதான் என்னும் அகம். 21
      14. ஏழாம் அதிகரணம்
      மேற்கோளும் ஏதுவும் இனி மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது.
      பொழிப்புரை அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான்.
      உதாரணம்
      கலைஆதி மண் அந்தம் காணில் அவை மாயை
      நிலையாவாம் தீபமே போல--- அலையாமல்
      ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம்
      தானத்தின் வேறாகும் தான். 22
      -------
      பொதுவதிகாரம் இலக்கணவியல்
      நான்காம் சூத்திரம்
      அந்த கரணம் அவற்றினொன்று அன்று அவை
      சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது
      அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் இதுவும் அது.
      15 முதல் அதிகரணம்.
      மேற்கோள் ஈண்டு இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில்
      ஒன்று அன்று என்றது.
      ஏது அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
      உதாரணம்.
      மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள்
      மனம் ஆதி மன்புலனின் அல்லன்-- மனமேல்
      உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில்
      உதிக்கும் கடல்திரையை ஒத்து 23
      சிந்தித்து ஆ சித்தம் தெளியாதாய் ஆங்காரம்
      புந்தியாய் ஆய்ந்து மனமாகிப்-- பந்தித்து
      வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
      அவ்வேறாம் போதுபோல் ஆங்கு 24
      அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
      மகாரம் மனம் சித்தம் விந்து--- பகாது இவற்றை
      நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்
      போதம் கடற்றிரையே போன்று 25
      எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
      நண்ணிய விந்துவொடு நாதத்து-- கண்ணில்
      பகர் அயன்மா லொடு பரமன் அதிதெய்வம்
      அகரஉக ரம்மகர தாம் 26
      16 இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்வான்மா சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.
      ஏது அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான்
      உதாரணம்
      மாய தனுவிளக்காம் மற்று உள்ளம் காணாதேல்
      ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய்--- வீயாத
      வன்னிதனை தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
      தன்னை மலம் அன்றணைதல் தான் 27
      17 மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்வான்மா சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்ச
      அவத்திதனாய் நிற்கும் என்றது.
      ஏது அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.
      உதாரணம்
      ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில்
      சென்றணையும் சித்தம் இதயத்து-- மன்ற ஏய்
      ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி
      மெய்யாதி விட்டு அகன்று வேறு
      இலாடத்தே சக்கிரத்தை எய்திய உள்ளம்
      இலாடத்தே ஐந்தவத்தை எய்தும்--
      அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
      அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு
      ஐந்தாம் சூத்திரம்
      விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
      அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போல
      தாம்தம் உணர்வின் தமியருள்
      காந்தம் கண்ட பசாசத்து அவையே
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் இவ்வான்மாக்களிடத்து தமது முதல் உபகாரம் உணர்த்துதல்
      நுதலிற்று.
      18. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
      ஏது அவற்றினான் ஆன்மா ஒன்றித்து காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்
      உதாரணம்
      ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
      ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்--ஐம்பொறியில்
      காணாதேல் காணாது காணும் உளம்
      காணாகண் கேளா செவி 30
      19. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இதுவும் தமது முதலாலே உணரும் என்றது.
      ஏது அவ் ஆன்மா தன்னாலே உணரும் இந்திரியங்களை போல தானும் தன்னை உணராது நிற்றலான்.
      உதாரணம்
      மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது
      என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன்
      கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண்
      எண்ணான் சிவன் அசத்தை இன்று 31
      வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
      வெய்யோனை ஆகாத மீன்போல--- மெய்யவனில்
      கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனை
      கண்டு உடனாய் மன்னுதலை காண் 32
      அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே
      அருளும் அவன் அன்றி இல்லை-- அருளின்று
      அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு
      இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து 33
      ஆறாம் சூத்திரம்
      உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
      இருதிறன் அல்லது சிவசத்தாம் என
      இரண்டு வகையின் இசைக்குமன் உலகே
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று
      20. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது.
      ஏது அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்
      உதாரணம்
      அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம்
      அசத்தாகும் மெய்கண்டான் ஆயின்-- அசத்துஅலாய்
      நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும்
      ஓரில் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு 34
      21. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே
      சத்தாயுள்ள சிவன் என்றது
      ஏது பிரகாசத்தினுக்கு பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்கு
      பிரகாசம் இன்மையானும்.
      உதாரணம்
      எண்ணிய சத்தன்று அசத்தன்று ஆம் என்றால் என்
      கண்ணி உளது என்றல் மெய்கண்டான்- எண்ணி
      அறிய இரண்டு ஆம் அசத்து ஆதல் சத்தாம்
      அறிவு அறியா மெய்சிவந்தாள் ஆம் 35
      உணர்ப அசத்தாதல் ஒன்று உணராது ஒன்றை
      உணருநீ தான் உணராய் ஆயின் --- உணரும் உனில்
      தான் இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால்
      தான் இரண்டா காணான் தமி 36
      பாவகமேல் தான் அசத்தாம் பாவனா அதீதம் எனில்
      பாவகமாம் அன்றென்னில் பாழ் அதுவாம்-- பாவகத்தை
      பாவித்தல் தான் என்னில் பாவகமாம் தன்னருளால்
      பாவிப்பது பரம் இல் பாழ் 37
      அறிய இரண்டு அல்லன் ஆங்கு அறிவு தன்னால்
      அறி படான் அறிவின் உள்ளான் -- அறிவுக்கு
      காட்டு ஆகி நின்றானை கண்ணறியா மெய்யென்ன
      காட்டாது அறிவு அறிந்து கண்டு 38
      அதுவெனும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே
      அதுவென்று அறி அறிவும் உண்டே---
      அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவுள் நிற்றல்
      அறியும் அறிவே சிவம் ஆம் 39
      --------
      உண்மை அதிகாரம் சாதனாவியல்
      ஏழாம் சூத்திரம்
      யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
      சத்தே யறியாது அசத்துஇலது அறியா
      இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ வெனின் மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று
      22. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு சத்தினிடத்து அசத்து பிரகாசியாது என்றது.
      ஏது மெய்யினிடத்து பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.
      உதாரணம்
      அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்
      அன்னியமிலான் அசத்தை காண்குவனேல்---- அன்னியமா
      காணான் அவன்முன் கதிர்முன் இருள்போல்
      மாணா அசத்து இன்மை மற்று 40
      23. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது
      ஏது அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான்
      உதாரணம்
      பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த
      பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் --- வாய்த்து அதனை
      கண்டுணர்வார் இல்வழியின் காணும் அசத்தின்மை
      கண்டுணர்வார் இல்லது என காண் 41
      24. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இருதிறன் அறிவு உளது இரண்டலா ஆன்மா என்றது.
      ஏது இவ்விரண்டனையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலும் உளதாயுள்ள
      அதுவே அவ்
      ஆன்மாவாம் என்றது
      உதாரணம்
      அரு உருவம் தான் அறிதல் ஆய் இழையாய் ஆன்மா
      அரு உருவம் அன்று ஆகும் உண்மை-- உருவா
      தோன்றி உடன் நில்லாது தோன்றாது
      தோன்றல் மலர்மணம்போல் தொக்கு 42
      மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும்
      பெயர்த்து உணர் நீ சத்து ஆகாய் பேசில்-- அசத்தும் அலை
      நீ அறிந்து செய்வினைகள் அன்றி வேறு அசத்து
      தான் அறிந்து துய்யாமை 43
      மெய்ஞான தன்னில் விளையாது அசத்தாதல்
      அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண்--- மெய்ஞ்ஞானம்
      தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல்
      தானே உளம் உளவா தான் 44
      எட்டாம் சூத்திரம்
      ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து என
      தம்முதல் குருவுமா தவத்தினில் உணர்த்தவிட்டு
      அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று
      25 முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது
      ஏது மேற் சரியை கிரியா யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தை காட்டியல்லது
      மோட்சத்தை கொடா ஆகலான்.
      உதாரணம்
      தவம்செய்வார் என்றும் தவலோகம் சார்ந்து
      பவஞ் செய்து பற்று அறுப்பார் ஆக -- தவஞ் செய்த
      நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலை
      கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு 45
      பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
      இசைத்து வருவினையில் இன்பம் -- இசைத்த
      இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான்
      மருவுவன் ஆம் ஞானத்தை வந்து 46
      26. இரண்டாம் அதிகரணம்.
      மேற்கோள் இனி இவ் ஆன்மாக்களுக்கு தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது.
      ஏது அவன் அன்னியம் இன்றி சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்.
      உதாரணம்
      மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு
      அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் -- மெய்ஞ்ஞானம்
      பின்னுணர்த்தும் அன்றி பிரளயா கலருக்கு
      முன்னுணர்த்தும் தான் குருவாய் முன் 47
      அறிவிக்க அன்றி அறியா உளங்கள்
      செறியுமாம் முன்பின் குறைகள் --- நெறியில்
      குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்
      குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு 48
      இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
      நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் -- இல்லா
      அருவாகி நின்றானை ஆரறிவார் தானே
      உருவாகி தோன்றானேல் உற்று 49
      27 மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கி தம்மை உணரா என்றது.
      ஏது அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றை காட்டி நிற்றலான்.
      உதாரணம்
      பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்
      தன்னிறமே காட்டும் தகைநினைந்து-- பன்னிறத்து
      பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான்
      மெய்பொருட்கு தைவமாம் வேறு 50
      28 நான்காம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ் ஆன்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை
      அணையும் என்றது.
      ஏது ஊசல் கயிறு அற்றால் தாய்தரையேயாம் துணையால்.
      உதாரணம்
      சிறைசெய் நின்ற செழும்புனலின் உள்ளம்
      சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து -- சிறைவிட்டு
      அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது
      உலைவுஇல் அரன் பாதத்தை உற்று 51
      எவ்வுருவும் தானென்னில் எய்துவார் இல்லைதாள்
      இவ்வுருவின் வேறேல் இறைஅல்லன் -- எவ்வுருவும்
      கண்போல் அவயவங்கள் காணாஅ கண் இல்லார்
      கண்பேறே காண் அ கழல் 52
      ஐம்பொறியின் அல்லை எனும் அந்த தர சிவனை
      ஐம்பொறியை விட்டு அங்கு அணைசகலன் -- ஐம்பொறியின்
      நீங்கான்நீர பாசிபோல் நீங்குமல கன்மம்வரின்
      நீங்கானை நீங்கும் நினைந்து. 53
      ஒன்பதாம் சூத்திரம்
      ஊனக்கண் பாசம் உணரா பதியை
      ஞான கண்ணினிற் சிந்தை நாடி
      உராத்துனை தேர்த்து என பாசம் ஒருவ
      தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
      29. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு அம்முதலை ஞான கண்ணினாலேயே காண்க என்றது.
      ஏது அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான்.
      உதாரணம்
      நாடியோ என்போ நரம்புசீ கோழையோ
      தேடி எனையறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன்
      தன்னாலே தனையும் கண்டு தமைக்காணார்
      என்னாம் என அறிவார் இன்று 54
      காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்கு
      காட்டாய உள்ளத்தை கண் காணா -- காட்டிய
      உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
      கள்வன்தான் உள்ளத்திற் காண் 55
      30. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம்
      என்று உணரற்பாற்று
      ஏது இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்றது
      வேற்றியல்பாகிய
      வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான்
      உதாரணம்
      நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனா
      தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல்
      ஆனா அறிவாய் அளவுஇறந்து தோன்றானோ
      வானே முதல்களையின் வந்து 56
      சுட்டி உணர்வதனை அசத்தென்ன
      சட்ட இனியுளது சத்தேகாண் --- சுட்டி
      உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையை தைவம்
      புணர்ந்ததனால் பொய்விட்டு போம் 57
      கண்டதை அன்று எனவிட்டு கண்டு அசத்தாய்
      அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணர -- பண்டு அணைந்த
      ஊனத்தை தான்விடுமாறு உத்தமனின் ஒண்கருட
      சானத்தின் தீர்விடம்போல் தான் 58
      31. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்விடத்து சிறீ£ பஞ்சாக்கரத்தை திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க
      என்றது.
      ஏது இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல
      நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின்
      அது நீக்குதற்கு என கொள்க.
      உதாரணம்
      அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை
      அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் --
      குண்டலினியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
      அண்டனாம் சேடனாம் அங்கு 59
      இந்துவில் பானுவில் இராகுவை கண்டுஆங்கு
      சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே
      காட்டாக்கின் தோன்றி கனல்சேர் இரும்பென்ன
      வாட்டானாம் ஓது அஞ்செழுத்து 60
      மண்முதல் நாளம் அலர் வித்தை கலாரூபம்
      எண்ணிய ஈசர் சதாசிவமாம் -- நண்ணில்
      கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம்
      நிலைஅதில் ஆம் அச்சிவன்தாள் நேர். 61
      ----
      உண்மை அதிகாரம் பயனியல்
      பத்தாம் சூத்திரம்
      அவனே தானே ஆகிய அந்நெறி
      ஏகன் ஆகி இறைபணி நிற்க
      மலமாயை தன்னொடு வல்வினை இன்றே
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பஒழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ வெனின் பாசŒயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
      32 முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்க
      என்றது.
      ஏது அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்.
      உதாரணம்
      நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல்
      தான் என ஒன்று இன்றியே தானதுவாய் --- நான் எனவொன்று
      இல்லென்று தானே எனும் அவரை தன்னடிவைத்து
      இல்லென்று தான் ஆம் இறை 62
      33. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி இறைபணி வழுவாது நிற்க என்றது.
      ஏது அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான்.
      உதாரணம்
      நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் வழி
      நாம் அல்ல நாமும் அரனுடைமை -- ஆம் என்னில்
      எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை
      முற்செய்வினையும் தருவான் முன் 63
      சார்ந்தாரை காத்தல் தலைவர் கடனாதல்
      சார்ந்தாரை காத்தும் சலமிலனா -- சார்ந்தடியார்
      தாந்தானா செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
      ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு 64
      இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
      முன்செய் வினை மாயை மூண்டிடினும் -- பின்செய்வினை
      மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே
      ஆய அதனால் உணரும் அச்சு 65
      நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும்
      பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் -- எண்ணி
      அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும்
      அவர்திறல் நீங்கார் அதற்கு 66
      சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின்
      இதமித்தல் பாசத்தில் இன்றி - கதமிக்கு
      எரிகதிரின் முன்னிருள்போல் ஏலா அசத்தின்
      அருகு அணையார் சத்து அணைவார் ஆங்கு 67
      பதினொன்றாம் சூத்திரம்
      காணும் கண்ணுக்கு காட்டும் உளம்போல்
      காண உள்ளத்தை கண்டு காட்டலின்
      அயரா அன்பின் அரன்கழல் செலுமே
      என்பது சூத்திரம்
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ எனின் பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று
      34. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது
      ஏது இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்
      உதாரணம்
      ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது
      ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும்
      ஒன்றொன்றா பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும்
      ஒன்றொன்றா பார்க்கும் உணர்ந்து 68
      ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணர
      போகமா தான் விளைந்த பொற்பினால் - ஏகமாய்
      உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை
      உள்ளத்தாற் காணானோ உற்று 69
      35. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது.
      ஏது அவன் அன்னியமின்றி செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்.
      உதாரணம்
      அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு
      இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் --- அருட்கண்ணால்
      பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல்
      நேசத்தின் தன்னுணுர்ந்தார் நேர். 70
      மன்னும் இருளை மதிதுரந்த வாறு அன்பின்
      மன்னும் அரனே மலம் துரந்து -- தன்னின்
      வலித்து இரும்பை காந்தம் வசஞ்செய்வான் செய்தல்
      சலிப்பில் விகாரி அலன் தான் 71
      நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
      நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -- நசித்துமலம்
      அப்பு அணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்
      கப்பு இன்றாம் ஈசன் கழல் 72
      பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப்போய் அகல
      தன்வாளே எங்குமாம் தன்மைபோல் -- முன்வாள்
      மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும்
      மலத்து இரித்து செல்லும் வரத்து 73
      பன்னிரண்டாம் சூத்திரம்
      செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
      அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
      மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
      ஆலயம் தாமும் அரன் என தொழுமே
      என்பது சூத்திரம்.
      வார்த்திக பொழிப்பு
      கருத்துரை என் நுதலிற்றோ வெனின் அசிந்திதனாய் நின்ற பதியை சிந்திதனா கண்டு
      வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
      36. முதல் அதிகரணம்
      மேற்கோள் ஈண்டு ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களை களைக என்றது.
      ஏது அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான்.
      உதாரணம்
      புண்ணிய பாவம் பொருந்தும் இ கான்மியமும்
      மண்முதல் மாயைகாண் மாயையும் -- கண்ணிய
      அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்றும்
      மெய்ஞ்ஞானி காகா விடு. 74
      37. இரண்டாம் அதிகரணம்
      மேற்கோள் இனி சிவபத்தர்களோடு இணங்குக என்றது.
      ஏது அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவார் ஆகலான்.
      உதாரணம்
      மறப்பித்து தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
      சிறப்பிலார் தம்திறத்து சேர்வை -- அறப்பித்து
      பத்தர் இனத்தா பரன் உணர்வினால் உணரும்
      மெய்த்தவரை மேவா வினை 75
      38. மூன்றாம் அதிகரணம்
      மேற்கோள் இனி பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் என கண்டு வழிபடுக
      என்றது.
      ஏது அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்.
      உதாரணம்
      தன்உணர வேண்டி தனது உருவை தான்கொடுத்து
      தன் உணர தன்னுள் இருத்தலால் -- உணரும்
      நேசத்தர் தம்பால் நிகழும் ததிநெய்போல்
      பாசத்தார்க்கு இன்றாம் பதி 76
      கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கிவேறு
      உண்டல்போல் நின்று அங்கு உளதாமால் -- கண்ட உரு
      தான் அதுவாய் அன்று ஆனான் அதுவா தோன்றானோ
      தான் அதுவா காணும் தவர்க்கு 77
      39. நான்காம் அதிகரணம்
      மேற்கோள் இனி இவ்விடங்களில் வழிபடுக என்றது.
      ஏது நரம்பு நாடி முதலானவற்றை தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும்
      ஆகலான்.
      உதாரணம்
      அது இது என்றது அதுஅல்லான் கண்டார்க்கு
      அது இது என்றதையும் அல்லான் -- பொது அதனில்
      அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
      அத்திவிதி அன்பின் தொழு 78
      வினையால் அசத்து விளைதலால் ஞானம்
      வினைதீரின் அன்றி விளையா -- வினைதீர
      ஞானத்தை நாடி தொழவே அதுநிகழும்
      ஆனத்தால் அன்பின் தொழு. 79
      தன்னை அறிவித்து தான் தானா செய்தானை
      பின்னை மறத்தல் பிழையல் அது -- முன்னவனே
      தானே தானா செய்தும் தைவமென்றும் தைவமே
      மானே தொழுகை வலி 80
      நூற்கு அதிகாரிகள்
      சிவமென்றும் அந்ததர சிந்தைநேர் நோக்க
      பவமின்றாம் கண் வாசகத்தின் -- சிவன் உண்டாம்
      ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு இங்கு ஒண்குருவால்
      இன்று இந்நூல் மும்மை மலர்க்கு
      சிறப்புப்பாயிரம்
      எந்தை சனற்குமரன் ஏத்தி தொழ இயல்பாய்
      நந்தி உரைத்து அருளும் ஞானநூல் -- சிந்தை செய்து
      தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாம் உணர
      ஏதுதிரு டாந்தத்தால் இன்று.
      சிவஞானபோதம் முற்றும்
      ---------------
      ---------------------------
      சிவஞானபோத சூர்ணிக்கொத்து
      ----------
      அன்பர்களே
      மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தை அருளிய காலந்தொடங்கி தமிழ தத்துவ சிந்தனை அதன்
      அடிப்படையிலேயே
      வளர்ந்துள்ளது. பண்டைய சிவஞானிகள் அதனை ஆழக்கற்று ஏனையோரும் புரிந்து கொள்ளும் வகையில்
      ஒவ்வொரு
      சூத்திரத்தின் உட்பொருளை சூரணித்து எளிய முறையில் விளக்கி செல்ல அதுவே சூர்ணிக்கொத்து
      என்று பெயர்பெற்று
      மூலநூலொடு உடன் வைத்து படிக்கப்படுவதும் ஆயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டு நல்லசாமி
      பிள்ளை வசனலங்காரதீபம்
      எழுதிய ஈழத்து செந்திநாதையர் தெளிவுரை கிருபானந்த வாரியார் ஆகியோருக்கும்
      இன்னும் பலருக்கும் மிகவும்
      பயன்பட்டதாய் இந்த சூர்ணிக்கொத்து விளங்கியுள்ளதை காணமுடிகின்றது. அன்பர்களுக்கு அதனை
      வழங்குவதில் மகிழ்ச்சி
      அடைகின்றேன்.
      அன்பன் கி.லோகநாதன்
      ----------------------------
      சூர்ணிக்கொத்து
      பொதுவதிகாரம் பிரமாணவியல்
      முதல் சூத்திரம்
      1. சகம் பிறப்பு இருப்பு இறப்பாகிய முத்தொழிலையுடையது
      2. அது அரனாலே உடையது
      3. மற்ற இருவரும் முத்தொழில் படுவர்கள்
      இரண்டாம் சூத்திரம்
      1. அரன் உயிர்களின் இரண்டற நிற்பன்
      2. உயிர்களுக்கு கன்மப்பலனை அரனே கொடுப்பன்
      3.உயிர்கள் அச்சு மாறியே பிறக்கும்.
      4. அரன் சருவ வியாபகன்.
      மூன்றாம் சூத்திரம்
      1. இல்லை என்கிற அறிவுடனே செல்லுகையினாலே அறி உயிர் உண்டு.
      2. எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாக சொல்லுகையினாலே உடற்கு வேறாய் உயிர்
      உண்டு.
      3. ஐந்தையும் ஒருவனே அறிதலின் ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கும் வேறாய் உயிர் உண்டு.
      4. கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினாலே அ கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு.
      5. நித்திரையிலும் பிராணவாயு தொழில் பண்ணவும் சரீரத்துக்கு புசிப்பும் தொழிலும்
      இல்லாதபடியினாலே பிராண வாயுவுக்கு
      வேறாய் உயிர் உண்டு.
      6. மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு.
      7. எல்லா தத்துவங்களுக்கும் வேறு பெயர் இருக்கையினாலே அந்தந தத்துவங்களுக்கு
      வேறாய் உயிர் உண்டு.
      பொதுவதிகாரம் இலக்கணவியல்
      நான்காம் சூத்திரம்.
      1. அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றி தொழில் இல்லாதபடியினாலே
      அந்தக்கரணங்களுக்கு வேறாய் உயிர்
      உண்டு.
      2. மலமறைப்பால் உயிருக்கு அறிவு இல்லை
      3. உயிர் மூன்று அவத்தைப்படும்.
      ஐந்தாம் சூத்திரம்
      1. உயிராலே தத்துவங்கள் எல்லாம் தொழில் செய்யும்.
      2. அரனாலே உயிர்களெல்லாம் அறியும்.
      ஆறாம் சூத்திரம்.
      1. உயிர் அறிவினாலே அறியப்பட்டதெல்லாம் அழியும்.
      2. அப்பிரமேயமாக அறியப்பட்டவனே அரன்.
      உண்மை அதிகாரம் சாதனவியல்
      ஏழாம் சூத்திரம்.
      1. அரன் பாசத்தை அனுபவியான்.
      2. பாசம் அரனை அனுபவியாது.
      3. உயிர் அவ் அரனை அடையும் அனுபவிக்கும்.
      எட்டாம் சூத்திரம்.
      1. உயிருக்கு நல்லறிவு தவத்தினாலேயே வரும்.
      2. உயிருக்கு சற்குருவாய் வருவது அரனே.
      3. உயிர் பஞ்சேந்திரியங்களை பற்றுகையினாலே தன்னையும் அறியமாட்டாது.
      4. உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால் தன்னையும் அறியும்.
      ஒன்பதாம் சூத்திரம்.
      1. உயிர் அரன் ஞானத்தினாலேயே அரனை காணும்.
      2. உயிர் பாசத்திலே பற்றற்றால் அரன் வெளிப்படுவன்.
      3. பஞ்சாட்சரசெபம் பண்ணினல் வாசனாமலம் போம்.
      உண்மை அதிகாரம் பயனியல்
      பத்தாம் சூத்திரம்.
      1. அரனுடன் ஒன்றாகி நில்.
      2. உன்தொழிலெல்லாம் அரன் பணி என்று கொள்.
      பதினொன்றாம் சூத்திரம்.
      1. ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அனுபவிப்பன்.
      2. அரனை மறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஐக்கியமா போவன்.
      பன்னிரண்டாம் சூத்திரம்.
      1. மும்மலங்களையும் களைக.
      2. சிவஞானிகளுடனே கூடுக.
      3. சிவஞானிகளையும் சிவலிங்கத்தையும் சிவனெனவே தேறி வழிபடுக.
      4. வழிபடாமையை ஒழிக.
      ஆக சூத்திரம் 12க்கு சூர்ணிக்கொத்து 39
      முற்றும்
      ------------------------------------------------------------------------
      30 2000